ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தர வாசம் செய்வாள்.
வலம்புரிச் சங்கில் தீர்த்தம் இட்டு, துளசி இலையைப் போட்டு பூஜித்து பின்னர், அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் விளங்கும் என்பது நம்பிக்கை.
ஆலயங்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்களப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதேபோன்று, கார்த்திகை மாத சோமவார (திங்கட்கிழமை) அபிஷேக காலங்களில் 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப்படும். அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள்.
சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம். வலம்புரி சங்கில் வைத்த தீர்த்தத்தைக் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும்.
கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில், நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார். வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை வலம்புரிச் சங்கில் இட்டு, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.