அபிஜித் நேரம் தினமும் வருவது தான். சூரிய உதயத்திற்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்தத்தை போல, சூரிய உதயம் ஆன பின்பு சரியாக ஆறு மணிநேரம் கழித்து வருவது தான் அபிஜித் நேரம்.
12 மணி முதல் 1 மணி வரை உள்ள காலமே அபிஜித் நேரம் என்றாகிறது. சுப நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் அபிஜித் நேரத்தை பயன்படுத்துவார்கள். ஜித் என்றால் வெற்றி பெறுதல் என்று அர்த்தம். அபிஜித் என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது அர்த்தமாகும்.
திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் கேள்விக்குறி போன்ற தோற்றத்துடன் காணப்படும் நட்சத்திரமே அபிஜித் நட்சத்திரமாகும். இதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த நட்சத்திரத்தை பார்த்துவிட்டால் அனைத்து காரியங்களும் வெற்றி தான்.
நம்மை படைத்த இறைவனுக்கே சில புராணங்களில் அபிஜித் நேரத்தில் வெற்றி தந்ததாக வரலாறுகள் உள்ளன. ரிஷிகளும், முனிகளும் மட்டுமன்றி, தேவர்களும், தெய்வங்களும் கூட இந்த நேரத்தை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
திங்கட்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கவும், மேலதிகாரிகளின் தொந்தரவு தீரவும் வேண்டிக்கொள்ளலாம். அதே போல வீடு யோகம் அமையவும் கடன் தீரவும் செவ்வாய்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.
குழந்தை பாக்கியம் பெறவும், இழந்ததை மீட்கவும் புதன்கிழமை வேண்டிக்கொள்ளலாம். வியாழக்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டினால் வெளிநாடு செல்லும் யோகமும் கல்வியில் மேன்மையும் கிடைக்கும். திருமணம் நடைபெறவும் விரும்பியவரை திருமணம் செய்யவும் வெள்ளிக் கிழமைகளில் அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.
சனிக்கிழமை வேண்டினால் வம்பு வழக்குகளில் இருந்து வெற்றி கிடைக்கும். ஞாயிறு அபிஜித் முகூர்த்த வழிபாடு வினைகள் அகலவும் உடல் நலம் மேம்படவும் வேண்டிக்கொள்ளலாம்.