Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரு பெயர்ச்சி ராசிப் பலன்கள் 2016 - 17 (ரிஷபம்)

குரு பெயர்ச்சி ராசிப் பலன்கள் 2016 - 17 (ரிஷபம்)
, செவ்வாய், 26 ஜூலை 2016 (14:41 IST)
பிரச்சனைகளை கண்டு அஞ்சாதவர்களே! இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு உங்களை எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க விடாமல் திணறடித்ததுடன், கைக்கு எட்டியதையெல்லாம் வாய்க்கு எட்ட விடாமல் தடுத்து, தாயாருடன் மனஸ்தாபங்களையும், அவருக்கு ஆரோக்யக் குறைகளையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்கிறார்.

இனி எதிலும் வெற்றி உண்டாகும். உங்களுடைய அடிப்படை வசதி, வாய்ப்புகளும் அதிகமாகும். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்யுமளவிற்கு பணவரவு அதிகரிக்கும். வருடக் கணக்கில், மாதக் கணக்கில், நாள் கணக்கில் கிடப்பில் கிடந்த காரியங்களெல்லாம் இனி அடுத்தடுத்து முடிவடையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சோர்ந்திருந்த முகம் மலரும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கணவன்-மனைவிக்குள் நிலவி வந்தப் பனிப்போர் நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். எத்தனையோ, கோவில் குலம் சுற்றியும், எவ்வளவோ மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களே! இனி அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்துப் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மகளுக்கு வரன் தேடி அலைந்து அலுத்துப் போனீர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து மணமகன் அமைவார். திருமணமும் முடியும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் உங்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் யார் என்பதை உணர்ந்து அவர்களிடம் மட்டும் இனி உறவுக் கொண்டாடுவீர்கள். தாயாருடனான மோதல்கள், அவருக்குக் இருந்து வந்த மருத்துவச் செலவுகளெல்லாம் விலகும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். எதிர்தரப்பினர் வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆழ்ந்த உறக்கமும் வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் தோற்றப் பொலிவுக் கூடும். கோபம் குறையும் இனி சாந்தமாவீர்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள்.
 
உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புது பதவிக்கு உங்களுடைய பெரிய பரிந்துரை செய்யப்படும்.  
 
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் தள்ளிப் போன வேலைகள் முடியும். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டை இடித்து கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். பெற்றோரின் ஆரோக்யம் சீராகும். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
 
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். நவீனரக வாகனம் மற்றும் கைப்பேசி வாங்குவீர்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். உங்களை அவமதித்தவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள்.
 
உங்கள் சப்தம-விரையாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார். மனைவிவழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். திடீர் பயணங்களால் செலவுகள் இருக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள்.
 
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 6-ம் வீட்டில் குரு மறைவதால் குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வரக்கூடும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துப் போகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஒற்றை தலை வலி, காலில் அடிப்படுதல், சிறுநீர் பாதையில் அழற்சி, தோலில் தடிப்பு, பசியின்மை, தூக்கமின்மை வந்துச் செல்லும்.
 
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
 
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் சுபச் செலவுகள் அதிகமாகும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். மாற்றுமொழிப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கு பண உதவிகள் கிடைக்கும். வேலையாட்களின் பிடிவாதப் போக்கு மாறும். உங்களின் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரபலமான இடத்திற்கு சிலர் மாற்றுவீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ரியல் எஸ்டேட், மூலிகை, ஏற்றுமதி-இறக்குமதி, ஜுவல்லரி வகைகளால் லாபம் வரும். தொல்லை தந்த பங்குதாரரை மாற்றிவிட்டு புதியவரை சேர்ப்பீர்கள்.
 
உத்யோகத்தில் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டீர்களே! அடிக்கடி அவமானப்படுத்தப்பட்டீர்களே! அதிக நேரம் உழைத்தும் அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் அல்லாடினீர்களே! இனி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் இனி மதிக்கத் தொடங்குவார்கள். வேலைச்சுமை குறையும். உயரதிகாரிகளும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வுத் தேடி வரும். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதலும் கனியும். கல்யாணமும் கூடி வரும். போலித்தனமாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். விடுபட்ட பாடத்தை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் உத்யோகம் அமையும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். தாயாருடனான இடைவெளி குறையும்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். ஆசிரியரின் நன்மதிப்பை பெறுவீர்கள். விளையாட்டிலும் பதக்கம் பெறுவீர்கள்.
 
கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய கலைத் திறன் வளரும்.
 
அரசியல்வாதிகளே! தலைமைக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். கட்சிக்குள் இருந்த சலகலப்புகள் நீங்கும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
 
ஆகமொத்தம் இந்த குருமாற்றம் வருமானத்தையும், வசதி, வாய்ப்புகளையும் பெற்று தரும்.
 
பரிகாரம்:
 
மேல்மருவத்தூர் அருகிலுள்ள அச்சிறுப்பாக்கம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆட்சீஸ்வரர் மற்றும் உமையாட்சீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குருப் பெயர்ச்சி பொதுப்பலன் (02.08.2016 முதல் 01.09.2017 வரை)