Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முருகனுக்கு உகந்த விரதங்களுள் முக்கியமான கிருத்திகை விரதத்தின் சிறப்புகள்...!

முருகனுக்கு உகந்த விரதங்களுள் முக்கியமான கிருத்திகை விரதத்தின் சிறப்புகள்...!
முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
ஆடி கிருத்திகை விரதமிருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் வேண்டுதல்கள் நிறைவேறும். ஆடிக்கிருத்திகை தினத்தன்று முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான்.
 
பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மேல் ஆலயங்களில் கூடும்  தினம்."திருத்தணி முருகனுக்கு அரோஹரா' என்ற கோஷம் வானைப் பிளக்கும். வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன்  முருகன் அழகனாக காட்சி தரும் நாள்.
 
வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும்  கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
 
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.  குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
 
விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல்  சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.
 
ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
 
தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும்  விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (08-04-2019)!