சிவ அம்சமான ருத்ராட்சம் என்பது சிவ பக்தர்கள் விரும்பி அணியும் ஒரு ஆன்மீக அடையாளம். உருண்டை வடிவத்தில் மணி போல் அதேநேரத்தில் ஒழுங்கற்று இருக்கும்.
ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளை பார்க்கலாம். இதற்குத்தான் முகம் எனப்பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என இப்படியே கணக்கிட வேண்டியதுதான். ருத்ராட்சத்தினை ஆண், பெண், ஜாதி, மதம் பேதமின்றி யார் வேண்டுமானாலும் அணியலாம்.
ருத்ரன் என்பது சிவபெருமானை ஆதி வடிவமாகும். அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியதே இந்த ருத்ராட்சை. ருத்ராட்சையில் பலவகை இருக்கின்றது. ஒரு முகம், இரண்டு முகம் எனத்தொடங்கி 21 முகம் வரை இந்த ருத்ராட்சம் இருப்பதாக சொல்கின்றனர். இதில் 14 முகம்வரை சாதாரண மனிதர்கள் அணியலாம். அதன்பிறகு வருபவையெல்லாம் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களும், இறைமூர்த்திகளுக்கு அணியப்படுபவை.
உலகில் விளையும் ருத்ராட்சையில் 50%க்கு மேல் 5 முக ருத்ராட்சமே ஆகும். இதுதான் ஆன்மீகத்துக்கு உகந்தது. இந்த 5 முக ருத்ராட்சத்திற்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன.
இந்த ருத்ராட்சம் சிவபெருமானால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த ருத்ராட்சத்தை ஒருவர் பக்தி சிரத்தையோடு அணிவதால் அவருடைய பாவங்கள் அழிக்கப்படும்.
நவகிரகத்தில் குருவின் கட்டுபாட்டில் இயங்கும் இந்த ருத்ராட்சம் தேவகுரு என அழைக்கப்படுகிறது. தேவர்களுக்கெல்லாம் குரு என்பதே இதன் பொருளாகும்.