இந்த வாரப் புனிதப் பயணத்தில் உங்களை நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் கர்னாவட் என்ற இடத்தில் உள்ள பழமையான கர்ணேஸ்வர் கோயிலிற்கு அழைத்துச் செல்கிறோம்.மகாபாரதக் காலத்தில் கெளரவர்கள் மால்வா பகுதியில் பல கோயில்களைக் கட்டினார்கள். செந்தால் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கர்ணேஸ்வர் (கருணை ஈஸ்வரர்) மகாதேவா கோயிலும் அதில் ஒன்று. இப்பகுதியை ஆண்டுவந்த அரசன் கர்ணன், நன்கொடைகளை வழங்குவதிலும், ஏழை மக்களுக்கு உதவுவதிலும் புகழ்பெற்று விளங்கியதால், அவர் மிகவும் விரும்பிய இந்தக் கோயில் கருணேஸ்வர் என்று அழைக்கப்படுகிறது.கர்ணனிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசன் கர்மா, கர்ணேஸ்வர் கோயிலில் வீற்றிருக்கும் தேவியின் தீவிர பக்தர் ஆவார். எனவே தினமும் தனது உயிரைக் காணிக்கையாகத் தருவதை கர்மா வழக்கமாக வைத்திருந்தார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த தேவி, ஒவ்வொரு நாளும் கர்மாவின் உடலில் சில துளிகள் அமுதத்தை தெளித்து அவரை உயிர்ப்பித்தாள். மேலும் 50 கிலோ எடையுள்ள தங்கத்தையும் கர்மாவிற்கு தேவி வழங்க, அதைத் தனது மக்களுக்குக் கர்மா பிரித்து வழங்கியதாக கதைகள் கூறுகின்றன.கெளரவர்கள் மத்தியப் பிரதேசத்தில் மால்வா, நிமாட் ஆகிய பகுதிகளில் பல கோயில்களைக் கட்டியிருந்தாலும் அவற்றில் 5 கோயில்கள்தான் மக்களிடம் புகழ்பெற்று உள்ளன.
அவை, ஓம்காரேஸ்வரரில் உள்ள மாமலேஸ்வர் கோயில், உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயில், நேமாவரில் உள்ள சித்தேஸ்வர் கோயில், பிஜாவரில் உள்ள பீஜேஸ்வரர் கோயில், கர்னாவட்டில் உள்ள கர்ணேஸ்வரர் கோயில் ஆகியவை ஆகும்.
இந்தக் கோயில்கள் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றினைக் கர்ணேஸ்வரர் கோயில் பூசாரி ஹேமந்த் துபே கூறினார்.
பாண்டவர்களின் தாயான குந்தி தினமும் மண்ணில் சிவலிங்கம் செய்து அதைக் கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இது ஏன் என்று பாண்டவர்கள் கேட்டதற்கு, எல்லாக் கோயில்களையும் கெளரவர்கள் கட்டியுள்ளதால் அங்கு தான் சென்று கும்பிட முடியாது என்று குந்தி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டவர்கள் ஒரே இரவில் மேற்கண்ட 5 கோயில்களின் முகங்களையும் திருப்பி வைத்துவிட்டனர்.
இதற்கு ஆதாரமாக உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கான சுரங்கப் பாதைகள் இன்னும் உள்ளன. ஆனால், பாதுகாப்பு கருதி எல்லாச் சுரங்கப் பாதைகளையும் கிராம மக்கள் மூடி விட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் சரவண மாதத்தில் இங்கு நடக்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அப்போது கர்ணேஸ்வரர் சிலை ஊருக்குள் வலம் வருகிறது.
எப்படிச் செல்வது?
வான் வழியாக: இந்தூர் விமான நிலையம் கர்னாவட் நகருக்கு அருகில் உள்ளது.
ரயில் வழியாக: இந்தூரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாஸ் ரயில் நிலையத்தில் இருந்து கர்னாவட் நகரத்தை எளிதில் அடையலாம்.
சாலை வழியாக: தேவாஸ், சாப்ரா நகரங்களில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.