தேவாசின் துல்ஜா பவானி, சாமுண்டா பவானி!
, ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (18:10 IST)
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேவாஸ் நகரம் இரண்டு கோயில்களுக்காகவே பிரசித்திப் பெற்று விளங்குகிறது!இந்தோரில் இருந்து உஜ்ஜைன் செல்லும் பாதையில் உள்ள தேவாஸ் நகரில் அமைந்துள்ள ஒரு குன்றின் மீது துல்ஜா பவானி, சாமுண்டா மாதாவும் எழுந்தருளியுள்ளனர். இவர்கள் இருவரையும் பெரிய அம்மா என்றும், சின்ன அம்மா என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். இவ்விரு தெய்வங்களும் சகோதரிகள் என்று இக்கோயிலின் பூசாரி நம்மிடம் கூறினார். ஒரு காலத்தில் பாடிமா என்றழைக்கப்படும் மூத்த சகோதரிக்கும், சோட்டிமா என்றழைக்கப்படும் இளைய சகோதரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனராம். அவர்களுக்கு இடையே இருந்த பகைமையைப் போக்கி கோபத்தை தணிக்க, ஹனுமானும், பைரவரும் இவ்விரு தெய்வங்களையும் வேண்டிக் கேட்டுக் கொண்டனராம்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று இவ்விரு தெய்வங்களும் தனித்தனியே அந்தக் குன்றின் மீதே நிலைப்பெற்றிருக்க ஒப்புக்கொண்டனராம். அந்த நேரத்தில் துல்ஜா பவானியின் பாதி உடம்பு பூமிக்குள் சென்றுவிட்டது. அந்த நிலையிலேயே இத்திருத்தலத்தில் அத்தெய்வங்களை இன்றும் தரிசிக்கலாம். இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இத்தெய்வங்களுடன் தூய மனதுடன் பிரார்த்தனை செய்வோருக்கு அவர்கள் எண்ணிய பணி ஈடேறும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இந்த தேவாஸ் நகரத்தில்தான் இரண்டு அரச வம்சங்கள் ஆட்சி செய்துள்ளன.
ஹோல்கர், பன்வார் ஆகிய இரண்டு அரச வம்சத்தினருக்கும் இவ்விரு தெய்வங்களே குலதெய்வங்களாகும். துல்ஜா பவானி ஹோல்கர் வம்சத்திற்கும், சாமுண்டா தேவி பன்வார் வம்சத்திற்கும் குலதெய்வங்களாவர்.
இத்திருத்தலத்திற்கு வருவோர் பைரவரையும் வணங்கிவிட்டுச் செல்கின்றனர். அவரை வணங்காமல் சென்றால் பிரார்த்தனை முழுமை பெறாது என்று பக்தர்கள் நம்புகின்றனர். நவராத்திரி விழாவின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
இத்திருத்தலத்திற்கு எப்படிச் செல்வது.
வான் வழி : இந்தோர் விமான நிலையத்தில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ளது.
ரயில் வழி : இந்தோர் - உஜ்ஜைன் அகல ரயில் பாதையில் இத்திருத்தலம் உள்ளது.
சாலை மார்க்கமாக, ஆக்ரா - மும்பை தேச நெடுஞ்சாலை எண் 3ல் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு இந்தோரில் இருந்தும், உஜ்ஜைனில் இருந்தும் 35 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.