சப்தஷ்ரிங்கி தேவியின் அர்த சக்திபீடம்!
நாசிக்கில் ஷாயாத்ரி மலை மீது அமைந்திருக்கும் சப்தஷ்ரிங்கி தேவியின் கோயிலை இந்த புனிதப் பயணத்தில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.இந்த சப்தஷ்ரிங்கி தேவியின் கோயில் கடல் மட்டத்தில் இருந்து 4,800 அடி உயரமுள்ள ஷாயத்ரி மலை மீது அமைந்திருப்பதுதான் இதன் விசேஷமாகும்.
கோயிலின் ஒரு பக்கத்தில் மிகப்பெரிய பள்ளமும், அதற்கு நேர் புறத்தில் மிக உயர்ந்த மலையும் அமைந்திருக்கின்றன. இந்த கோயிலை மட்டும் அல்ல அதை ஒட்டி அமைந்திருக்கும் இயற்கை எழில் மிக்க பகுதிகளையும் காண கண் கோடி வேண்டும் என்கின்றனர் இப்பகுதிக்கு வருபவர்கள்.மஹிசாசுரனின் தொல்லைகள் தாங்க முடியாத தெய்வங்கள் அனைவரும் தங்களை காப்பாற்றுமாறு தேவி மாவை வணங்கியபோது அவர் சப்தஷ்ரிங்கி தேவி ரூபத்தில் அருள் பாலித்துள்ளார். அதை குறிக்கும் வகையில் 108 சக்தி பீடங்கள் உலகம் முழுவதும் அமைக்கப்பட்டன.
அதில் மூன்றரை சக்தி பீடங்கள் மஹாராஷ்டிராவிலேயே அமைந்துள்ளது. அதில் அரை சக்தி பீடம்தான் (அர்த சக்தி பீடம்) இந்த சப்தஷ்ரிங்கி தேவி கோயிலாகும். இந்தியாவிலேயே வேறு எங்கும் அர்த் சக்தி பீடக் கோயில் இல்லை என்பதும் மேலும் ஒரு சிறப்பாகும்.மஹாகாளி, மஹாலஷ்மி, மஹாசரஸ்வதி என்று பல ரூபங்களில் சப்தஷ்ரிங்கி தேவி வணங்கப்படுகிறார். ராமாயணக் காலத்தில் ராமரும், சீதா பிராட்டியும், லஷ்மணும் கானகம் சென்றபோது நாசிக்கில் உள்ள இந்த இடத்திற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.இந்த கோயிலில் அமைந்திருக்கும் சப்தஷ்ரிங்கி தேவியின் திருவுருவச் சிலை 8 அடி உயரமுடையது, 18 கைகளையும், அதில் 18 வகையான ஆயுதங்களையும் தாங்கி நிற்கிறது. மஹிஷாசுரனை அழிக்க பல்வேறு ஆயுதங்களுடன் தேவி காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது.சிவனின் திரிசூலம், விஷ்ணுவின் சக்கரம், சங்கு, அக்னியின் எரியும் சக்தி, வாயுவின் வில் மற்றும் அம்பு, இந்திரனின் வஜ்ராயுதம், யமனின் கயிறு, தக்ஷபிரபதியின் ஸ்படிகமாலை, பிரம்மனின் கமண்டலம், சூரியனின் கதிர்கள், காலஸ்வரூபியின் ஆயுதம் என ஒவ்வொரு கைகளிலும் ஒவ்வொரு கடவுளின் ஆயுதங்களை ஏந்தி நிற்கிறார் சப்தஷ்ரிங்கி தேவி.இந்தக் கோயிலை அடைய 472 படிகளை ஏறி செல்ல வேண்டும். சித்திரை மாதம் மற்றும் ஆவணி மாத நவராத்திரியும் இங்கு விசேஷமாக இருக்கும்.
சித்திரை மாதத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் சப்தஷ்ரிங்கி தேவி, ஆவணி மாத நவராத்திரியின் போது ஆக்ரோஷமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலைச் சுற்றி 108 புனித கிணறுகள் அமைந்துள்ளது, கோயிலின் இயற்கை எழிலை மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.
எப்படிச் செல்வது
விமான மார்கம் - மும்பை அல்லது புனே விமான நிலையங்கள் அருகில் அமைந்துள்ளது. அங்கிருந்து பேருந்து அல்லது வாடகைக்கு வாகனம் அமர்த்திக் கொண்டு போகலாம்.
ரயில் மார்கம் - நாசிக்கிற்கு எல்லா பகுதிகளில் இருந்தும் ரயில்கள் செல்கின்றன. இங்கு வர ரயில் மார்கம் சிறந்ததாக அமையும்.
பேருந்து மார்கம் - நாசிக்கில் இருந்து 65 கி.மீ. தூரத்தில்தான் சப்தஷ்ரிங்கி தேவி ஆலயம் உள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து பேருந்துகள் நிறைய உள்ளன.