சிவாலயம் என்றால் அங்கு நந்தி நிச்சயம் இருக்கும். ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் ஆலயத்தில், சிவ பெருமானுக்கு முன் நந்தி வைக்கப்படவில்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோயில் இது ஒன்று தான்.
இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு!
ஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. சிவந்த கண்களுடன் சிவபெருமான் சினத்தில் இருந்தபோது, பிரம்மனின் 5 தலைகளில் நான்கு தலைகள் வேதங்களை உச்சரிக்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு தலை மட்டும் சிவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டது. வெகுண்ட சிவ பெருமான், அந்தத் தலையை கொய்தார்.
இந்த செயலால் சிவனுக்கு பிரம்ம ஹத்யா (பிராமணனை கொல்லுதல்) தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழுவதும் சுற்றினார். ஆனால், பாவ நிவர்த்திக்கு வழி தெரியவில்லை.
சோமேஸ்வர் என்ற இடத்திற்கு சிவன் வந்தபோது, பசு ஒன்று தனது கன்றுடன் பேசுவதைக் கேட்டார். பிராமணன் ஒருவனை தனது கொம்பால் குத்திக் கொன்று பிரம்ம ஹத்யா பாவத்திற்கு ஆளான கன்றுக்கு, தாய்ப்பசு பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.
இதன்படி, பரிகாரத்திற்காக பசுங்கன்று சென்ற திசையை பின்பற்றி சிவபெருமானும் சென்றார். பஞ்சவதி அருகே வந்ததும் கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்ம ஹத்யா பாவத்தை போக்கி, பழைய நிலைக்கு திரும்பியது. அதே இடத்தில் சிவனும் நீராடி தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
பின்னர், அருகே இருந்த மலையில் சிவபெருமான் குடி கொண்டார். சிவனை பின்தொடர்ந்து சென்ற பசு, அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது. ஆனால் இதற்கு சிவன் ஒப்புக் கொள்ளவில்லை. தன்னை பிரம்ம ஹத்யா பாவத்தில் இருந்து விடுவித்ததால் குருவுக்கு சமமானவர் என்றும், அதனால் தன் முன் அமர வேண்டாம் என்றும் நந்தியைக் கேட்டுக் கொண்டார். அதன்படி இங்குள்ள சிவாலயத்தில் நந்தி சிலை வைக்கப்படவில்லை.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிவ பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். முன்பு இங்கு சிவலிங்கம் மட்டுமே வழிபடப்பட்டு வந்தது. பின்னர் இங்குள்ள பக்தர்கள் நிதி திரட்டி தற்போதுள்ள ஆலயங்களை எழுப்பினர்.
இங்குள்ள கோதாவரி ஆற்றில், ஸ்ரீராமன் தனது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்து வழி பட்டதாகக் கூறப்படுவதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு நீராடி தங்கள் முன்னோர்களை வழிபடுகின்றனர்.
ஸ்ராவண மாதத்திலும், ஒவ்வொரு திங்கட் கிழமையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.
எப்படி செல்வது :
சாலை மார்கமாக : புனேவில் இருந்து 210 கி.மீ. தொலைவிலும்; மும்பையில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது. பேருந்து, டாக்ஸி வசதிகள் உள்ளன.
ரயில் மார்கமாக : மும்பையில் இருந்து நாசிக் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து இக்கோயிலுக்குச் செல்லலாம்.
விமான மார்கமாக : புனே விமான நிலையம் சென்று, பிறகு சாலை வழியாக கோயிலை அடையலாம்.