திருப்பதி சீனிவாசப் பெருமாள்!
, திங்கள், 3 நவம்பர் 2008 (11:13 IST)
ஏழுகுண்டலவாடா என்று தெலுங்கிலும், பெருமாளே.. சீனிவாசா... கோவிந்தா என்று நாம கரணத்துடன் தமிழர்களும் இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி அயல்நாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்களும் தாய்நாடு திரும்பும்போது மிகவும் ஆர்வத்துடன் வந்து தரிசிக்கும் வெங்கடாச்சலபதி சுவாமிகளின் திருத்தலமான திருப்பதி மிகப்பிரசித்தி பெற்ற புன்னிய தலமாகும்.ஏழுமலையான் என்று அழைக்கப்படும் வெங்கடேசர், திருப்பதி மலையில் ஏழு சிகரங்களில் ஒன்றான வெங்கடாத்ரியில் எழுந்தருளியுள்ளார்.இப்பிரபஞ்சத்தைப் படைத்து அவை அனைத்தும் குடிகொண்டிருக்கும் இறைவனே, வெங்கடேஸ்வர சுவாமியாக வழிபடப்படுகிறார்.
இந்தியாவில் மிகப்புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று என்கின்ற புகழ் மட்டுமின்றி, அதிகமான பக்தர்களை ஒவ்வொரு நாளும் ஈர்க்கும் புனிதத் தலமாகவும் பக்தர்கள் அளிக்கும் கொடையால் அதிகமான வருவாயை பெறும் திருத்தலமாகவும் திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரர் கோயில் திகழ்கிறது.பெருமாள், வெங்கடேஸ்வரர், பாலாஜி என்று அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் கடவுள், விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறது.
திருமலையில் உள்ள சுவாமி புஷ்கரணி எனும் குளத்தின் தெற்குக் கரையில் வெங்கடேசப் பெருமாள் எழுந்தருளி உள்ளார். பெருமாளை தரிசிக்க அவரின் சீரிய பக்தரான ஸ்ரீராமானுஜர் பதினோறாவது நூற்றாண்டில் இம்மலையில் ஏறி வந்த போது அவர் கோயிலுக்கு வருவதற்கு முன்னரே தனது தரிசனத்தைத் தந்து அருள்பாலித்து அசி புரிந்தார் என்றும் அதன் காரணமாகவே ஸ்ரீராமானுஜர் நூற்று இருபது ஆண்டுகள் வாழ்ந்து பெருமாளின் கீர்த்தியை தனது தூய பக்தி வழியில் பரப்பியதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி தினத்தன்று திருப்பதி திருமலையில் குடிகொண்டிருக்கும் வைகுண்ட வாசனை வழிபட பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.அந்த நாளில் பெருமாளை தரிசிப்போர் பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, மரணத்திற்குப் பின் பிறவிப் பெருங்கடலைக் கடந்து முக்திப் பெரும் பாக்கியமும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.திருப்பதி திருமலை திருக்கோயில் பதினோரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்து பல்லவ அரசர்களால் பராமரிக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது.ஆயினும் 15வது நூற்றாண்டில் விஜய நகர பேரரசின் காலத்தில்தான் இத்திருக்கோயிலின் பெருமை எங்கும் பரவியது என்றும், அதன் பிறகுதான் பக்தர்களின் வருகை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.அதன் பிறகு 1843ல் இருந்து 1933 வரை இத்திருக்கோயில் ஹதிராம்ஜி மடத்தின் பூசாரிகளால் பராமரிக்கப்பட்டு வந்தது.1933
ல் சென்னை மாகாண அரசு திருமலை திருப்பதி தேவஸ்தானக் குழுவை அமைத்து இக்கோயிலின் நிர்வாகத்தை ஒப்படைத்தது.
வெங்கடேசப் பெருமாளை வணங்க வரும் பெரும்பலான பக்தர்கள் கீழ்த்திருப்பதியில் இருந்து திருமலைக்கு போடப்பட்டுள்ள மலைப்பாதையில் 14 கி.மீ. தூரம் நடந்துச் சென்றே தரிசிக்கின்றனர்.இங்கு வரும் பக்தர்களில் பெரும்பாலோர் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியதும் மொட்டை அடித்து தலைமுடியைக் காணிக்கையாக்குகின்றனர்.இத்திருத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது மிகச்சிறப்பானதாக கருதப்படுகிறது.பல்வேறு நேரங்களில் பல்வேறு பூஜைகளுக்கு இடையே நீண்ட நேரம் காத்திருந்து வெங்கடேஸ்வரரை பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும் திருப்பதி லட்டு உலகப் புகழ்பெற்றது என்பதனை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இத்திருக்கோயிலில் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா புகழ்பெற்றது.பக்தர்கள் தங்கி தரிசித்துச் செல்வதற்கு ஏராளமான தங்குமிடங்களை திருப்பதி தேவஸ்தானம் கட்டியுள்ளது.திருப்பதிக்கு எப்படி செல்வது?
சென்னையில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் திருப்பதி உள்ளது. சாலை மார்கமாகவும், ரயில் மூலமும் திருப்பதியை அடையலாம். கீழ்த்திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்குச் செல்ல ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் ஏராளமாக இயக்கப்படுகின்றன.
ஹைதராபாத்தில் இருந்தும் தென்னிந்தியாவின் மற்ற நகரங்களில் இருந்தும் திருப்பதியில் உள்ள விமான தளத்திற்கு சிறிய வகை விமானங்களின் சேவை இயக்கப்படுகிறது.