மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் இந்திய மொகலாய கட்டடக் கலைக்கு சான்றாகத் திகழ்கிறது தாஜூல் மஸ்ஜித் என்றழைக்கப்படும் மசூதியாகும். மசூதிகளுக்கெல்லாம் கிரீடமாகத் திகழும் இந்த மசூதியை ஜாமா மஸ்ஜித் என்றும் அழைக்கின்றனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய மசூதியாகத் திகழும் இந்த மசூதிக்குள் எங்கு சென்றாலும் ஆன்மீகத்தின் சாயல்தான்.அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த முக்கிய வாயிலிற்குள் நுழைந்து வரிசையான தூண்களுக்கு இடையே உள்ள பாதையில் நடந்து சென்று தொழுகை செய்வதற்கான கூடத்தை அடையலாம். இங்குதான் ஒவ்வொரு வெள்ளியன்றும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் நமாஸ் செய்கின்றனர். இந்தக் கூடத்தை ஒட்டிய பகுதியில் ஒரு மதராசா பள்ளி உள்ளது. தூரத்தில் இருந்தே நம் கண்ணையும் கருத்தையும் கவரும் தாஜூல் மசூதியில் செம்பவழ நிறத்தில் இரண்டு பெரிய மினார்களும், வெள்ளை நிறத்திலான மூன்று அரை முட்டை வடிவிலான கோபுரங்களுடன் திகழ்கிறது.
இந்த மசூதியில் உள்ள சமாதி மானுடத்திற்கு சரியான பாதையை காட்டுகிறது என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். போபாலில் வாழ்ந்த சிற்பிகளைக் கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, இந்திய மொகலாய கட்டடக் கலையின் அழகிய வரலாற்றுச் சான்றாக உள்ளது. மசூதியின் சுவர்களில் எல்லாம் மலர்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹாலைக் கட்டிய மொகலாயப் பேரரசரான ஷாஜஹானின் மனைவியான புடிசியா பேகம் இந்த மசூதியைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. ஈத் திருநாளின் போது இம்மசூதி அலங்கரிக்கப்பட்டு முழு அளவுடன் காட்சி அளிக்கிறது.
புதூப்கானா உருது மொழியில் நூலகம் என்றால் புதூப்கானா என்று பொருள். இந்த நூலகத்தில் உருது இலக்கியம் தொடர்பான பல அரிய நூல்கள் உள்ளன. தங்க திரவத்தால் எழுதப்பட்ட புனிதக் குரான் நூலும் இங்கு உள்ளது. இந்த புத்தகத்தை பாதுகாப்பாக சமைத்தவர் அலாம்கீர் ஒளரங்கசீப். உருது இலக்கியம் தொடர்பான புத்தகங்களும், இதழ்களும் இந்த நூலகத்தில் உள்ளன.
இஜ்திமா
இங்கு நடைபெறும் இஜ்திமா எனும் 3 நாள் கூடலில் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்தும் இஸ்லாமியர்கள் வருகின்றனர்.
போபால் செல்லும் ஒவ்வொருவரும் காண வேண்டிய அழகிய ஆன்மீக திருத்தலம்.
எப்படிச் செல்வது :
தென் மாநிலங்களில் இருந்து டெல்லிக்குச் செல்லும் எல்லா ரயில்களும் போபால் ரயில் நிலையத்தை கடந்துதான் செல்கிறது.
இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்து போபாலிற்கு விமான சேவை உள்ளது.