கோவாவின் குழந்தை இயேசு தேவாலயம்!
இந்த வார புனிதப் பயணத்தில் கோவாவில் உள்ள பஸிலிகா ஆஃப் போம் ஜீசஸ் என்ற தேவாலயத்தைப் பற்றிப் பார்க்கலாம். கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ஓல்டு கோவாவில் இந்த பழமையான தேவாலயம் அமைந்துள்ளது.
கோவாவின் முதல் கிறிஸ்தவ சன்னியாசியான செயின்ட் ப்ரான்ஸிஸ் சேவியர் உடல் இங்கு வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக உலகம் முழுவதும் பஸிலிகா ஆஃப் போம் ஜீசஸ் தேவாலயம் பிரபலமடைந்துள்ளது. உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இந்த தேவாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. போம் ஜீசஸ் என்பதற்கு நல்ல அல்லது குழந்தை ஏசு என்றும் பொருள். இந்த தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 1594ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பின்னர் 1605இல் புனிதப்படுத்தப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
மூன்றடுக்கு மாடியைக் கொண்ட இந்த தேவாலயத்திற்கு மிகப் பெரிய நுழைவு வாயிலும், அதற்கு இரு புறங்களிலும் சிறிய வாயில்களும் காணப்படுகிறது. இதன் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ள ‘IHS’ என்ற 3 எழுத்துகள் கிரேக்க மொழியில் இயேசுவை குறிக்கும் முதல் 3 எழுத்துகளாகும்.
இந்த தேவாலயத்தில் நுழைந்த உடனேயே வலது பக்கத்தில் செயின்ட் ஆண்டனியின் பலிபீடமும், இடது பக்கத்தில் செயின்ட் சேவியரின் மர உருவமும் இருப்பதைக் காணலாம். அதீத பளபளப்புடன் காணப்படும் முகப்பு பலிபீடத்தில் குழந்தை இயேசுவும், அதன் மேல்பகுதியில் புனித இக்னாடியஸ் லயோலாவின் சிலையும், ‘IHS’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட பதக்கமும் இடம்பெற்றுள்ளன.
அந்தப் பதக்கத்திற்கு மேல் பகுதியில் கடவுளின் திரிமூர்த்தி சொரூபமான தந்தை, மகன் மற்றும் புனித ஆத்மா வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை நடத்தும் இடத்தின் உட்புறம் புனிதர்களின் வாழ்க்கையை விளக்கும் வகையில் படங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
கடந்த 1552ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி சீனாவுக்கு கடல் பயணம் மேற்கொண்ட போது செயின்ட் பிரான்சிஸ் சேவியர் உயிரிழந்தார். பின்னர் அவர் அவரது ஆசைப்படி அவரின் உடல் பஸிலிகா ஆஃப் போம் தேவாலயத்தில் புதைக்கப்பட்டது. சேவியர் உடல் புதைக்கப்பட்ட தினத்தில் எப்படி இருந்ததோ அதே நிலையில் இன்றும் அவர் உடல் உள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுக்கு பின்னரும் அவரது உடல் காட்சிக்கு வைக்கப்படும் போது லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இருந்து பஸிலிகா ஆஃப் போம் ஜீசஸ் தேவாலயத்திற்கு வருகை தருகின்றனர்.
ஆண்டுதோறும் டிசம்பர் 3ஆம் தேதி இந்த தேவாலயத்தில் செயின்ட் சேவியர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவாவில் கொண்டாடப்படும் கிறிஸ்தவ பண்டிகைகளில் இதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதும் நிதர்சனமான உண்மையே. அன்று காலை நடக்கும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கோவா வருகின்றனர்.
தேவாலயத்திற்கு செல்வதற்கான பயண வழிகள்:
சாலை வழி: தலைநகர் பனாஜியில் இருந்து பஸிலிகா ஆஃப் போம் ஜீசஸ் தேவாலயத்திற்கு செல்ல ஏராளமான பேருந்துகள், வாடகைக் கார்கள், ஆட்டோ ரிக்-ஷாக்கள் இருக்கின்றன.
ரயில் மார்க்கம்: நாட்டின் பிற நகரங்கள் கொங்கன் ரயில்வே மூலம் கோவாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. மர்காவ், வாஸ்கோட-காமா ஆகிய ரயில் நிலையங்களில் ஓல்டு கோவாவுக்கு அருகில் உள்ளவை.
விமான வழி: வாஸ்கோட-காமாவில் டபோலிம் விமான நிலையம் இயங்குகிறது. அங்கிருந்தும் எளிதாக பஸிலிகா ஆஃப் போம் ஜீசஸ் தேவாலயத்திற்கு செல்ல முடியும்.