கானிஃப்நாத் புனிதத் தலம்!
இந்த வார புனிதப் பயணத்தில் நத் சமூக குருவின் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு மதி என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள இந்த புனிதத் தலம் கானிஃப்நாத் மஹாராஜ் என்று பலராலும் அறியப்படுகிறது. இந்த கோயில் பெளனகிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது.கானிஃப்நாத் மஹாராஜ் 1710ஆம் ஆண்டு பங்குனி மாதம் வைத்திய பஞ்சமி நாளன்று சமாதி அடைந்தார்.இந்த தலத்திற்கு மூன்று வாயில்கள் உள்ளன. மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது இந்த தலம்.இந்த கோயிலுக்கு ஒரு வரலாறு உள்ளது. அதாவது, முகலாய சாம்ராஜ்யத்தின் போது ஒளரங்கஜேப் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது கணவர் மஹாராஜ் சத்ரபதி ஷஷூ விடுதலையாக வேண்டும் என்று ராணி யேசுபாய் வேண்டிக் கொண்டதாகவும். அவரது வேண்டுதல் நிறைவேறியதால் இந்த இடத்தில் கோயில் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த கோயிலைக் கட்டும்பணியில் அங்கு வாழ்ந்த தலித் மக்களின் பெரும்பங்கு இருந்ததாகவும், அதனாலேயே அப்பகுதியை தலித்துகளின் கடவுளின் பெயரால் பந்தாரி என்று அழைக்கப்படுவதாகவும் தெரிகிறது.
அப்பகுதியில் வாழ்ந்த குடும்பத்தினர் ஸ்ரீ கானிஃப்நாத் மஹாராஜையே குலதெய்வமாக வழிபட்டுள்ளனர்.
ஹிமாலயாவில் பிறந்து வளர்ந்த கானிஃப்நாத், கடும் வனத்தில் இருந்து பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். பல ஆண்டுகள் யோகா பயின்றுள்ளார். பின்னர் ஏதோ ஒரு உந்துசக்தியின் காரணமாக அவர் ஏழை மக்களுக்கு ஆன்மீக மார்கத்தை காட்டுவதற்கு முன்வந்தார்.
அதன் தொடர்ச்சியாக தான் மக்களுக்கு சொல்ல நினைத்ததையும், ஆன்மீக வழிகளையும் கவிதைகளாக இயற்றினார். மேலும் அதில் பொதுமக்களின் கஷ்டங்களையும் எடுத்துரைத்தார். அவரது கவிதைகளை எவர் ஒருவர் படித்தாலும் அது அவரைப் பற்றிய கவிதை என்று கூறும் அளவிற்கு பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவும் அந்த கவிதைகள் அமைந்தன.
இந்த தலத்தில் மாதுளம்பழ மரம் ஒன்று உள்ளது. இதனையும் பக்தர்கள் வழிபடுகின்றனர். அதாவது இந்த மாதுளம்பழ மரம், கானிஃப்நாத்தின் பக்தை தாலி பாயின் நினைவாக உள்ளது.
தாலிபாய் கானிஃப்நாத்தின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் ஜீவசமாதி ஆக விரும்பினார். அந்த சமயம் கானிஃப்நாத் தோன்றி அவருக்கு ஆசி வழங்கினார். அந்த சமயத்தில் அங்கு மாதுளம் பழ மரம் விருட்சமாக வளர்ந்தது. அதனாலேயே அதனை இந்த தலத்தின் விருட்சமாக கருதுகின்றனர்.
மேலும் இந்த இடத்தில்தான் அங்குள்ள கிராமங்களில் ஏதேனும் பிரச்சினை என்றால் பஞ்சாயத்துகள் நடத்தப்பட்டு நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எப்படிச் செல்வது?
சாலை மார்கமாக : மஹாராஷ்டிர மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில்தான் மதி கிராமம் அமைந்துள்ளது. அஹமத் நகரில் இருந்து பேருந்து மூலமாகவும், வாடகைக் கார்கள் மூலமாகவும் இந்த தலத்தை அடையலாம்.
ரயில் மார்கமாக : இந்த கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது அஹமத் நகர் ரயில் நிலையம்.
விமானம் மூலமாக : அஹமத் நகருக்கு 180 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புனே விமான நிலையம்.