Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புரட்சிப் பூக்கள்- எதிர்ப்புக் குரலில் எளிய கவிதைகள்!

புரட்சிப் பூக்கள்- எதிர்ப்புக் குரலில் எளிய கவிதைகள்!
, செவ்வாய், 27 மே 2008 (19:41 IST)
webdunia photoWD
புரட்சிப் பூக்கள் என்ற கவிதைத் தொகுதியை படைத்தவர் தஞ்சை வடசேரியைச் சேர்ந்த கவிஞர் க.சொ.சிவசுப்ரமணியன்.

அணிந்துரையில், தஞ்சை தமிழ்ப் பலகலைக்கழக இலக்கியத் துறை விரிவுரையாளர் நா.காமராசு அவர்கள் கூறுவது போல் " எளிய நடையும், எளிய பதங்களும் இவரது கவிதைகளை அலங்கரிக்கின்றன, சமூக விமர்சனங்கள் இவரது கவிதைகளில் எள்ளலாக வெளிப்படுகின்றன"

"தமிழ், தமிழ் நாடு, கடவுள் மறுப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, தமிழ் மொழியின் மீதுள்ள ஆர்வம், இன உணர்வு, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, மத மறுப்பு ஆகிய வற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களாகவே என் எழுத்து இருக்கும்" என்று கவிஞரே தனது "என்னுரை"-யில் கூறுவது அவரது கவிதைகள் பற்றிய சரியான மதிப்பீடு என்றால் மிகையாகாது.

முதலில் இவர் கொண்டாடும் நாயகர்களான தந்தை பெரியர், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கார் பற்றிய இவரது சித்திரம் கவிதைகளாக வெளிப்படுகிறது. இவையெல்லாம் வெறும் "வாழ்க வாழ்கவே" ரக வாழ்த்துரைகளே.

நடைமுறை வாழ்க்கையை விமர்சிக்கும் "நிலாச்சோறுக்கு அழும் குழந்தை" என்ற கவிதை, குடும்பத்தில் குழந்தைகள் கவனிப்பாரின்றி தனிமைப்படுத்தப்படும் போக்கை வெளிப்படுத்துகிறது.

கடவுள் என்ற ஒன்று இருக்கும் வரைதான் மனிதனுக்கு தேவை இருக்கிறது. தேவை இருப்பதனால்தான் மனிதன் சீரழிகிறான், எனவே "தேவை அற்றுப்போன இடமே கடவுள் செத்துப்போன இடம்" என்று பளிச்சென கூறுகிறார் கவிஞர்.

அதேபோல், இன்னமும் கற்சிலைக்கு கறந்த பால், குட்டிப்பையனுக்கோ பாக்கெட் பால்தான் என்ற தொனியில் கடவுள் சிலை அபிஷேகத்தை எள்ளுகிறார் கவிஞர்.

கும்பகோணத்தில் பள்ளியில் தீப்பிடித்து குழந்தைகள் பலியான சம்பவத்தால் பாதிக்கப்பட்டு எழுதிய கவிதை, மிகவும் தைரியமாக "எழுப்புதல் கூட்டம் நடத்தும் பால் தினகரன் அவர்களே" என்று துவங்கி கருகிய குழந்தைகளை எழுப்ப வாருங்கள் என்று எள்ளல் அழைப்பு விடுக்கிறது. பால் தினகரனை அழைக்கும் தைரியம் பாராட்டுக்குரியது.

அதே போல் இறந்த குழந்தைகளை உயிர்பெற வைப்பாரா பிள்ளைக்கறி கேட்ட கடவுள் என்று இந்துக் கடவுளர்கள் மீதும் அனல் கக்குகிறார் கவிஞர். முந்தைய கவிதையில் பால் தினகரனை நோக்கி கேட்டது போல்..

"காசிராமன் தெருவில்" என்று வெளிப்படையாக குறிப்பிடும் தைரியம் மீண்டும் பாராட்டுக்குரியது.

அதே போல் "அடி வாங்கும் பிள்ளையார்" கவிதையில் பிள்ளையார் சிலைகள் நிலையாக இருக்க இந்து முன்னணிப் பிள்ளையார் மட்டும் கடலில் கரைக்கப்படும் வினோதத்தை எள்ளி நகையாடுகிறார்.

எத்தனை நாள் சும்மா இருக்கப்போகிறாய் தமிழனே போன்ற முழக்கக் கவிதைகளும், முயற்சித் திருவினையாக்கும் போன்ற தன்னம்பிக்கை கவிதைகளும் கூட இந்த தொகுப்பில் உள்ளன.

ஆனால் ஒரு இரட்டை வரிக்கவிதையில் ஹைக்கூ பாணி அழுத்தத்தை எளிமையாகக் கூறிவிடுகிறார் கவிஞர்: "பணம் பேசும்போது குணம் மவுனமாக இருக்கும்" என்ற கவிதையும் பளிச் ரகம்.

"இன்று நாம் சுடுவதெல்லாம் பொய்! அன்று அவன் சுட்டதுதான் மெய்" என்று ஆங்கிலேய துரையை சுட்ட வாஞ்சி நாதனைப் பற்றிய கவிதையும் சுருக்கமாக நறுக்குத் தெறித்தாற்போல் எழுதப்பட்டுள்ளது.

அதே போல் அனைவரும் கண்டு கொள்ளாது விடும் பத்திரிக்கை துறை பற்றியும் தனது சாடலை வைக்கிறார் கவிஞர். "தமிழன் புத்தியை மழுங்கடித்து, குருடனாக்கும், எத்து வேலையைச் செய்து வருகின்றன" என்று சாடுகிறார்.

அதேபோல் ஐயப்ப பக்தர்களைப் பற்றிக் கூறுகையில், "குடல் கருக பட்டினி கிடந்து, மனைவியை ஒதுக்கி வைத்து" என்பதில் பெண்கள் அனுபவிக்கும் உடல் ரீதியான துயரம் கூட இவரது அக்கறையின் வித்தியாசத்தை எடுத்துரைக்கிறது.

இன்று ஆன்மீகம் என்ற பெயரில் போலிச் சாமியார்களை தேடி ஓடும் மடமையையும் கவிஞர் சாடுகிறார். "எங்கும் சாமியார் எனும் சாக்கடை நாற்றம் நச்சுக் காற்றய் சுற்றுகிறது" என்று எச்சரிக்கிறார்.

கங்கை நீரோடு பார்ப்பானின் சிறு நீர் கோபுர கலசத்திற்கு சென்றபோது புனிதமானது என்ற கவிதை வரிகள் கவிஞர் மீது பெரியாரின் பேச்சுக்கள் ஏற்படுத்திய தாக்கம் தெரிகிறது. அதே போல் மூட நம்பிக்கை என்ற கவிதையில் இன்று பெரிதும் தாக்கப்படவேண்டியுள்ள சாமியார்கள் போலவே "கிளி ஜோதிடமும், எலி ஜோதிடமும் பார்த்து தன்னம்பிக்கை இழந்து விட்டாய்..." என்று ஜோதிடம் பார்ப்பதை மடமையாக எள்ளுகிறார்.

நமது தமிழ் மொழியின் ஆத்திச் சூடியையும் விட்டு வைக்கவில்லை கவிஞர். "இளமையில் கல்" முன்னோர்கள் சொன்னார்கள்... செங்கல் தூக்கினான் சிறுவன்" என்று நடைமுறை வாழக்கைக்கு உதவாத ஆத்திச் சூடியையும் எள்ளி நகையாடுகிறார்.

ஆனால் முதலில் குறிப்பிட்ட ஹைக்கூ பாணி கவிதை, "சின்னப் பெட்டிக்குள் அடைபட்டுக் கிடக்கும் தற்கொலைப் படைகள் தீக்குச்சிகள்" என்று ஒரு சிறிய படிமத்தினால் மெலிதாக உணர்த்தும் கவிதைகள் இந்த தொகுப்பில் மிகவும் குறைவு. கூக்குரல்களும், எக்காளமும், முழக்கங்களும் மட்டுமே பிரதான குரலாக ஒலிக்கிறது.

மேலும் இன்றைய சிந்தனைப் போக்குகள் முற்றிலும் வேறு விதமாக மாறிவிட்ட சூழலில் பகுத்தறிவு, விஞ்ஞானம், மனித கண்டுபிடிப்புகள் ஆகியவை உலகிற்கும், பூமிக்கும், பூமியில் மனித வாழ்விற்கும் ஏற்படுத்தியுள்ள மீளவியலா நெருக்கடிகள் பற்றி மருந்திற்குக் கூட ஒரு கவிதை இல்லை. கடவுளின் இடத்தை இன்று தொழில் நுட்ப மயமான விஞ்ஞானம் பிடித்துக் கொண்டு கடவுளை விடவும் அழிவு வேலைகளை செய்து வருகிறது. அணு குண்டுகள் பற்றி ஏன் ஒரு கவிதை கூட இல்லை? மனிதனின் அழிவு வேலைகளையும், அழிவுச் சிந்தனைகளையும் தகர்ப்பதும் கூட பகுத்தறிவின் கடமைதான்.

ஆனால் பெண்ணடிமை, பெண்களின் அவல நிலை என்று கூறும் கவிஞர் இறுதியில் "புதுக்கவிதை எழுதுவது எப்படி" என்ற தலைப்பில் கூறும் ஒரு விஷயம் முரண்பாடாக தொனிக்கிறது. கவிதை பற்றி கண்ணதாசன் கூறியதை இவர் எடுத்தாள்கிறார்: "வடக்கத்தி மங்கையர் போல் முழுக்கவும் மூடாமல், கேரள மாதர் போல் முழுக்கவும் திறந்து விடாமல் தமிழகப் பெண்கள் போல் ஒதுங்கியும் ஒதுங்காமல் அழகு காட்டும் கவிதைகள்... புதுக் கவிதைகள்" என்ற மேற்கோளை புகழ்ந்துரைக்கிறார்.

பெண்களின் உடலை மறைந்திருந்து பார்க்கும் ஆணின் கள்ளப்பார்வையை, கவிதையை பெண்ணாக உருவகம் செய்து விளக்கம் கொடுக்கும் கண்ணதாசனின் ஆண் பார்வையை இவர் புகழ் பாடியுள்ளார். பெண்களின் மீதான ஆதிக்கம் என்பது அவர்களின் உடல் மீதான இத்தகைய பார்வையிலிருந்து துவங்குவதுதானே?


நூ‌ல் ‌கிடை‌க்கு‌ம் இட‌ம்

க.சொ. ‌சிவசெ‌ந்‌தி‌ல்வே‌ல்
18, சபா‌ப‌தி தெரு முத‌ல் மாடி
அமை‌ந்தகரை
செ‌ன்னை - 29

க. சொ. ‌சிவசு‌ப்ரம‌ணிய‌ன்
கீழ‌வீ‌தி,
வடசே‌ரி - 64905
ஒர‌த்தநாடு வ‌ட்ட‌ம்
த‌ஞ்சை மாவ‌ட்ட‌ம்

Share this Story:

Follow Webdunia tamil