கோவை மாநகரில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதற்கு முன், ஜூன் 13ஆம் தேதியன்று அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நேயம் நடத்திய கருத்தரங்கில் வெளியிடப்பட்ட தமிழ் மலர் 2010, தமிழ் ஆர்வலர்கள், தமிழனப் பற்றாளர்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஒரு மொழி, இன, வரலாற்று ஆய்வுத் தொகுப்பாகும்.
தமிழ்க் கல்வி, தமிழியக்கம், தமிழர் நாகரீகம், சங்க இலக்கியம், தற்கால இலக்கியங்கள், புலம் பெயர் தமிழிலக்கியம், கவிதைகள், நூலரங்கு, நினைவக் குறிப்புகள் என்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு தமிழறிஞர்கள் அளித்த ஒரு பெரும் பங்களிப்பாக தமிழ் மலர் 2010 கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும்.தமிழ், தமிழியக்கம், தமிழர் நாகரீகம், தமிழ்க் கல்வி ஆகியன ஒரு பிரிவாகவும், இலக்கியப் பிரிவில் சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் என்று தனியாகவும், கவிதைகள், நூலரங்கு, நினைவுக் குறிப்புகள் ஆகியன தனித்தனிப் பிரிவுகளாகவும் கொண்டு, ஒவ்வொரு பிரிவிலும் பல தமிழ் அறிஞர்களின் பங்களிப்பு பெறப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது.412
பக்கங்களைக் கொண்ட தமிழ் மலர் 2010, “ஈழத் தமிழர் வாழ்வும், விடுதலையும் இனப்படுகொலைக்கு உள்ளாகி, ஒடுக்கப்பட்ட நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படுவது தமிழ் உணர்வாளர்களுக்கு உவப்புத் தருவதாய் இருக்க முடியாது” என்று கூறித் தொடங்கினாலும், “கடந்த 25 ஆண்டுகளுக்குள் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழியல் ஆய்வுக்கும் ஏற்பட்டுள்ள வாழ்வும் வளர்ச்சியும் என்ன? கடந்த 50 ஆண்டுக்கு இடையில் தமிழ் மற்றும் தமிழ் மக்களின் வாழ்வு மேன்மைக்கும் விடுதலைக்குமெனத் தோன்றிய தமிழ் இயக்கங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்குள் என்னவாயின? 1980க்கும் பிறகு உலகளவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? வளர்ச்சி என்ன? செம்மொழி என்ற தகுதியைப் பெற்ற நிலையில் தமிழியல் ஆய்வில் நம்மவர் மேற்கொள்ள வேண்டிய தீவிரமான ஆய்வுப் பணிகள் என்ன?” என்று கேள்வி மேல் கேளவி எழுப்பி, அதற்குப் பதில் காண தமிழ் அறிஞர்களிடமும், மொழியியல் ஆய்வாளர்களிடமும் பெற்ற கட்டுரைக் கொண்டு தொகுக்கப்பட்டதே தமிழ் மலர் 2010 ஆக உருப்பெற்றுள்ளது.இரண்டே மாத கால அவகாசத்தில் 60க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், திறனாய்வாளர்கள், படைப்பாளிகள், தமிழ் இயக்கச் சான்றோர் பெருமக்களின் கட்டுரைகளைப் பெற்று இம்மலரை வெளியிட்டுள்ளது தமிழ்நேயம்.பேராசிரியர் ம.இலெ.தங்கப்பாவின் மறுபார்வை, பழ.நெடுமாறனின் உலகத் தமிழ் அமைப்புகளைக் காப்பது நமது கடமை, அரு.கோ.வின் இயக்கங்களும் மயக்கங்களும் தமிழின இழப்புகளும், தமிழண்ணலின் தமிழ் மொழி வழங்கிய இசைச் செல்வம், பிலிப் சுதாகரின் வாய்மொழித் தமிழும் அரசின் வரலாறு காணாத தமிழ் மொழி அழிப்பும், முத்து. வசந்தகுமாரின் தமிழினத்தின் வாழ்வும் தமிழ் மொழியும், கு.முத்துக்குமாரின் தமிழ்க் கல்வியின் தேவையும் இன்றைய நிலையும், ம.ரா.போ.குருசாமியின் தமிழ்ச் சான்றோர் சிலர், சூரிய தீபனின் தமிழ்த் தேசியத்தினூடாக படைப்பாளிகளின் பயணம், இரா.செல்வி(குணவதி)யின் படைப்பிலக்கியமும் பயிற்சியும், தமிழாலயனின் தேமதுரத் தமிழோசை - இதழ் அன்று; தமிழியக்கம் ஆகியன பகுதி ஒன்றிலும்;
ப.மருதநாயகம் எழுதிய தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும், குளோரியா சுந்தரமதியின் அகப்பாட்டின் கவிதைக் கோட்பாடு - சில சிந்தனைகளும், நா.கு.பொன்னுசாமி(இரணியன்)யின் மரபியலும் செருகியலும், நா.நளினிதேவியின் தமிழின் செவ்வியல் மரபுத் தொடர்ச்சியும், க.பூரண சந்திரனின் புலம் பெயர் இலக்கியமும், செந்தமிழ்த் தேனீயின் ஞானியின் மாயக் கம்பளம் ஆகியன இலக்கியம் தொடர்பான பகுதி இரண்டிலும்;
தமிழேந்தியின் கருமலை தமிழாளன், புதுவை இரத்தினதுரையின் அபிதவன், பூ.அர.இரவீந்திரனின் செந்தமிழ்த் தேனீ, வெள்ளியங்காட்டானின் ஈழத்துப் பெண் கவிஞர்கள் ஆகிய படைப்புகள் கவிதைப் பகுதியிலும்;
திராவிடரும் திராவிட இந்தியாவும், நிகழ் கட்டுரைக் களஞ்சியம், நாட்டுப்புறத் தெய்வங்கள், பழமலய் கவிதைகள், அருச்சுனன் தபசு, திசை தவறிய தேசமும் மொழியும், சயாம் மரண இரயில், நமது கச்சத் தீவு, கொங்கு நாடும் கிழக்கிந்தியக் கம்பெனியும், பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டம், மொழிப் பிரச்சனையும் ஸ்டாலினும் ஆகிய நூலரங்கிலும் இடம்பெற்றுள்ளன.
நினைவுக் குறிப்புகள் பகுதியில், நாத்திகம் இராமசாமி, பூ.அர.குப்புசாமி, புலவர் கி.செல்வரங்கன், குருவிக்கரம்பை வேலு, ப.சிங்கராயர் ஆகியோர் நினைவு கூறப்பட்டுள்ளனர்.
அரசால், பெரும் பொருட் செலவுடன், அதிகார வர்க்கத்தின் உழைப்புடன், ஊடகங்களின் ‘நல்’லாதரவுடன், அழைத்து விருதளித்தால் அதற்காகக் காத்திருக்கும் அறிஞர் பெருமக்களைக் கொண்டு ஒரு பெரும் விழா நடத்தி சிந்திக்க மறந்த ‘தமிழ் மொழி மீட்சி’யை தமிழ் மலர் 2010 நம் கருத்திற்கு கொண்டு வருகிறது.
மலர் கிடைக்குமிடம்:
தமிழ்நேயம்
24, வி.ஆர்.வி.நகர்,
ஞானாம்பிகை ஆலை (அஞ்சல்),
கோயம்புத்தூர் - 641029
தொலைபேசி: 0422 - 264119