சல்மான் ருஸ்டி, ஜெய்டி ஸ்மித், ஸ்டிங் போன்ற உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மட்டுமின்றி, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் உலக இலக்கிய பெருவிழா வரும் நவம்பரில் கேரளத்தில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தின் வேல்ஸில் உள்ள ஹே ஆன் வை நகரில் நடைபெறும் இந்த உலக இலக்கிய விழாவில் உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களும், இசையமைப்பாளர்களும், ஓவியர்களும், திரைப்படத் துறையின் முன்னணி படைப்பாளிகளும் கலந்துகொள்வார்கள். இவர்களோடு இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள்.
அந்த விழா இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இங்குள்ள அரண்மனையில் இலக்கிய படைப்புகள் மீதான விவாதம், படித்தல், புதிய வடிவங்களை ஆராய்தல் என்று பல்வேறு தலைப்புகளில் நிகழ்வுகள் நடைபெறும். திருவனந்தபுரம் அரண்மனையில் மட்டுமின்றி, அருகிலுள்ள கோவளம் கடற்கரையில் திறந்த வெளி அரங்கிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த நிகழ்வில் உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் 10 முதல் 15 பேரும், இந்தியாவின் சிறந்த 10 இலக்கியவாதிகளும், கேரளத்தின் 15 எழுத்தாளர்களும், புதின கர்த்தாக்களும் கலந்துகொள்வார்கள்” என்று இந்நிகழ்வை ஏற்பாடு செய்யும் டீம் வொர்க் புரொடக்ஸன்ஸ் நிறுவனத்தின் சஞ்சய் கே.ராய் கூறியுள்ளார்.