இந்திய நாட்டில் வாழும் அலிகளுடைய வாழ்க்கை முறைகள், கஷ்ட நஷ்டங்கள், அவமானங்கள், அவர்களுக்கு நல்வாழ்வு தருவதற்கான வழிமுறைகள்.. இவற்றைச் சொல்லும் ஒரு வித்தியாசமான நாவல் என்ற முழக்கத்துடன் வெளிவந்துள்ளது கமலி என்ற புதினம்.
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அழகிரி விசுவநாதன். இவரது அழகுமலைப் பதிப்பம் சார்பில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் விலை ரூ.88 மட்டுமே.
புத்தகத்தினைப் பற்றி துரை நாகராஜன் கூறியுள்ள மதிப்பீட்டினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் புதினத்தை தொடங்கியிருக்கிறார் எழுத்தாளர் அழகிரி விசுவநாதன். என்றாலும், `சென்னையிலுள்ள பதிப்பகங்கள் இந்த அரவாணிகள் இலக்கியத்தை புத்தகமாகப் போட முன்வரவில்லை' என்று முன்னுரையில் குறிப்பிடுகிற இடத்திலேயே கதை ஆரம்பமாகிவிடுகிறது.
இந்த சமூகத்தில் அரவாணிகள் உண்மையான நிலை இதுதான். எல்லோரின் ஒதுக்குதலுக்கும் ஆளாகிறார்கள். இந்த நிலை மாறவேண்டம். அவர்களும் ஏற்றம் பெற வேண்டும் என்கிற கனவின் வெளிப்பாடுதான் இந்தப் புதினம்.
`
அரவாணிகளுக்கு சமூக உரிமைகள் அனைத்தும் வேண்டும்' என்கிற இந்தப் புதினம் வெளியாகவே பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆமாம். 2001ம் ஆண்டில் கமலியை எழுதிமுடித்து விட்டார் ஆசிரியர். ஏறக்குறைய சென்னையிலுள்ள எல்லா பதிப்பகங்களின் படியையும் மிதித்துவிட்டு கடைசியில் சொந்தமாகப் பதிப்பகம் தொடங்கி வெளியிட்டிருக்கிறார்.சொந்தமாக பதிப்பகம் தொடங்குவது இரண்டு பழைய கார்களை வாங்கி பராமரிப்பதற்குச் சமம். எத்தனை எழுத்தாளர்களுக்கு அந்த வலுவிருக்கிறது?அரவாணிகள் இலக்கியம் அதிகம் வராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.அரவாணிகளின் அவல வாழ்க்கையைச் சித்தரித்த - எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் வாடாமல்லிக்குப் பிறகு வந்திருக்கும் படைப்பு இந்தக் கமலியாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.படைப்புலகமும் அரவாணிகளை புறக்கணித்தது வேதனைக்குரியது.
திரைப்படத்துக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று அரசு அறிவித்ததைப்போல, அரவாணி இலக்கியத்தை ஊக்குவிக்கவும் கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.தென்திசைப் பதிப்பகம் வெளியிட்ட `அரவாணிகள் சமூக அறிவியல்', சந்தியா பதிப்பகம் வெளியிட்ட (புதினம்) `மூன்றாம் பாலின் முகம்'. இரண்டும் ப்ரியாபாபு என்கிற அரவாணியால் எழுதப்பட்டது. அரவாணிகளின் உணர்வுகளின் தொகுப்பாக வந்திருக்கும் 'உணர்வும் உருவமும்' புத்தகத்தை தொகுத்தவர் ரேவதி. இவரும் அரவாணிதான். அடுத்து, வித்யா எழுதிய தன் கதை சொல்லும் `நான் சரவணன் என்கிற வித்யா'.அரவாணிகளால் எழுதப்பட்ட இந்தப் புத்தகங்கள் சொல்லுகிற சேதி இதுதான். தங்களுக்கான தேவையை, தங்களுக்கான உரிமையை முட்டி மோதி தாங்களே பெற வேண்டியிருக்கிறது என்பதுதான்.எழுத்தாளர் அழகிரி விசுவநாதன் 2001ல் கண்ட கனவு. கமலி, ராஜி இரு அரவாணிகளும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கமலி சமூக நலத்துறை அமைச்சராகிறாள்.`
கனவு மெய்ப்பட வேண்டும். கைவசமாவது விரைவில் வேண்டும்' என்ற பாரதியின் பாடல் இங்கே அனைவரின் நினைவுக்கும் வரட்டும்.2004
ல் அரவாணிகளுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. ஆனால், தாங்கள் விரும்பும் ஆண் அல்லது பெண் பாலினத்தில்தான் தங்களை வைத்துக் கொள்ளலாம். அரவாணிகள் கேட்ட மூன்றாம் பாலினம் உரிமை 2007ல் கிடைத்தது. கமலா ஜான் என்கிற அரவாணியால் வடநாட்டில் சட்டமன்ற உறுப்பினர் ஆக முடிந்தது. இைவ எல்லாம் அழகிரி விசுவநாதன் இந்த புதினத்தின் மூலமாக கண்ட கனவின் ஒரு துளிதான். அரவாணிகள் குறித்து இவர் கண்ட மற்ற கனவும் விரைந்து வசமாக வேண்டும்.
அழகிரி விசுவநாதன் ஒரு கதை சொல்லியின் நேர்த்தியில் கதையை நகர்த்திச் செல்கிறார். கனமான கதைக்களம் என்றாலும் இயல்பான நகைச்சுவை அங்கங்கே பட்டாசு கொளுத்துகிறது.`
ரயிலு கியிலு கிடைக்கலையா?'`
ரயிலு இருக்கு. கியிலு எங்கடி இருக்கு?'`
வாண வேடிக்கை மட்டுமா பார்த்தோம்? பாண வேடிக்கை எல்லாம் பார்த்தோம்.'`
ஆபரேசன் சக்ஸஸ். ஆனால் பேசண்ட் சாகவில்லை.' - இப்படி நிறைய சொல்லலாம்.அதேப்போல இவரது எழுத்து சாதுரியத்துக்கு சாட்சியாக இன்னொரு இடம். `இவர்கள் மந்திரியாக வந்தாலாவது லஞ்சம் வாங்காமல் இருப்பார்கள்' என்று சொல்லுகிற இடத்தில் - அரசியல் லஞ்சக் காடாக ஆகிவிட்டதை சொல்லாமல் சொல்லும் லாவகம் - அழகு.தன்னை பராமரித்த ராஜதுரை இறந்த செய்தி கேட்டதுமே தானும் இறந்து விடுகிற அரவாணி ராஜாத்தியின் பாத்திரப் படைப்பு மனதில் நின்று விடுகிறது. அதுபோல் இன்னொரு முக்கிய பாத்திரம் நடத்துனர் முரளியின் மனைவி மஞ்சுளா. பெரும்பான்மை பெண்களின் பிரதிநிதியாக மஞ்சுளாவைப் பார்க்க முடிகிறது.கணவன் ஒரு பெண்ணிடம் போனான் என்கிற செய்தி மஞ்சுளா காதில் எட்டிவிட்டது. மறுநாள் எதுவும் நடக்காதது போல் கணவன் வருகிறான். என்ன செய்திருப்பாள்?`
இனிமே எங்கயாவது பொம்பளைங்ககிட்ட போனீங்கன்னு ரிப்போர்ட் வந்துச்சு.. குழந்தைகளை அழைச்சுகிட்டு என் அப்பா வீட்டுக்கு போயிடுவேன்.' என்று சொன்னதாய் எழுதுகிறார் ஆசிரியர்.இப்படித்தான் ஒரு பெண் எளிதாக எடுத்துக் கொள்வாளா? ஒரு ஆண் இன்னொரு பெண்ணிடம் போன செய்தி எளிதில் மன்னிக்கக் கூடியதா? பேயாட்டம் ஆடிவிட மாட்டார்களா? இப்படி அலையலையாய் கேள்விகள் எழுகின்றன.உண்மையில் பெரும்பான்மை தமிழ்ப் பெண்கள் மன்னித்து ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால்தான் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் விவாகரத்து குறைவாக இருக்கிறது. சில இடங்கிளல் வந்தாலும் மிகக் கவனமாகக் கைளாளப் பட்ட பாத்திரப் படைப்பாக மஞ்சுளா படுகிறாள்.இப்படி சொல்லிக் கொண்டே போக இருக்கிறது நிறைய விஷயம்.சொல்லிக் கேட்பதைவிட புதினத்தை வாசிக்கும் அனுபவம் அலாதியானது. அரவாணிகளுக்கு நலவாரியம் அமைத்து நல்லது செய்வது ஒரு பக்கம் கணக்கமில்லாமல் நடக்கட்டும். இன்னொரு பக்கம் கமலி போன்ற அரவாணி இலக்கியங்கள் மக்களின் வாசிப்புக்கு கிடைக்கிற ஏற்பாடும் வேண்டும். இதுபோன்ற இலக்கியங்களே சமூக மாற்றத்தை விரைந்து ஏற்படுத்த உதவும்.இந்த உலகில் எதுவும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. ஆனாலும் இந்த புதினம் விமர்சனத்துக்கு அப்பால் வைத்து பார்க்கும் தகுதிகொண்டது. இது கூட ஒரு வகையில் விமர்சனம்தான் என்று சொல்லுவீர்கள் என்றால் - இதுதான் இதற்கு சரியான விமர்சனம் என்பேன்.அரவாணிகளைப் போல் ஒதுக்குதலால் புண்பட்டுப் போயிருக்கும் எய்ட்ஸ் நோயாளிகள் குறித்தும் இப்படியொரு தன்னம்பிக்கை தரும் புதினத்தை எழுத்தாளர் அழகிரி விசுவநாதன் படைத்தளிக்க வேண்டும் என்ற என் ஆசையையும் பதிவு செய்கிறேன். அதற்கு காலம் ஒத்துழைக்கட்டும்.நன்றி.துரை நாகராஜன்.