Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவை அரித்துவரும் ஈராக் போர் - புத்தக ஆய்வு!

அமெரிக்காவை அரித்துவரும் ஈராக் போர் - புத்தக ஆய்வு!
, செவ்வாய், 6 மே 2008 (15:03 IST)
webdunia photoWD
நோபல் பரிசு வென்ற உலக வங்கியின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் கென்னடி பள்ளி விரிவுரையாளர் லின்டா பில்மேஸ் ஆகியோர் எழுதி சமீபத்தில் வெளியிட்ட "3 டிரில்லியன் டாலர் போர்" (1 பில்லியன் = 100 கோடி; 1 டிரில்லியன் = 1000 பில்லியன்) என்ற புத்தகத்தில் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இராக் போரே காரணம் என்று கூறியுள்ளனர்.

போர்கள் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பது இரண்டாம் உலகப் போரின் பிரதான கருத்தாக இருந்தது. ஆனால் போருக்குப் பிறகு அது வெறும் கற்பனை என்று உணரப்பட்டது. தற்போதைய பொருளாதார அறிஞர்கள் நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு போர் ஒரு பெரும் காரணமே என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.

எந்த நோக்கத்திற்காக இராக் மீது அமெரிக்கா படையெடுத்ததோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. அதாவது இராக்கில் ஜனநாயகம் மலரவேண்டும் என்ற ஜார்ஜ் புஷ் கூறும் நோக்கமல்ல. உலகிற்கே தெரிந்த கச்சா எண்ணெய் விவகாரத்தில்தான் இராக் படையெடுப்பின் நோக்கம் நிறவேறவில்லை என்று இந்த ஆய்வு நூலில் கூறப்பட்டுள்ளது.

போர் துவங்கும் முன் பேரல் ஒன்றுக்கு 25 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் இன்று 120 டாலர்களாக அதிகரித்துள்ளது.

இராக் போர் எதற்காக துவங்கப்பட்டது என்பது குறித்த அனைவரது கருத்துக்களையும் தான் ஏற்பதாக கூறும் இந்த நூலின் ஆசிரியர்கள், கச்சா எண்ணெணெய்யை மலிவாக பெறவேண்டும் என்ற அந்த நோக்கம் அமெரிக்காவிற்கு படுதோல்வியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்கள். ஆனால் எக்சாந்மொபைல் உட்பட சில எண்ணெய் நிறுவனங்கள் கொழுத்த பணம் ஈட்டியுள்ளனர். இந்த நிறுவனங்களின் லாபமும், பங்கு விலையும் அதிகரித்ததுதான் மிச்சம் என்று இந்த நூல் கூறுகிறது.

உலக உணவுப் பற்றாக்குறைக்கும், உணவு பொருட்கள் விலையேற்றத்திற்கும் இந்திய மக்களின் உணவுப் பழக்கமே காரணம் என்று ஜார்ஜ் புஷ் மடத்தனமான ஒரு கருத்தை...

தெரிவித்திருந்தார். அதற்கு கண்டனங்கள் எழுந்து அடங்குவதற்குள் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஒருவர் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள தேவைகளே காரணம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த புத்தகம் இராக் போரே அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்றும், மலிவான எண்ணெய் என்ற நோக்கம் தவிடுபொடியானது என்றும் புள்ளிவிவரங்களுடன் துல்லியமான ஆய்வின் மூலம் அமெரிக்காவை தோலுரித்து உள்ளது.

இந்த புத்தகத்தில் இராக் போருக்காக அமெரிக்கா செலவு செய்யும் தொகைகள் பற்றிய அதிர்ச்சி தரும் தகவல்கள் பல உள்ளன. அனைத்தும் அரசு ஆவணங்களிலிருந்து பெறப்பட்டதுதான் என்று இந்த நூலின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இராக் போர் அமெரிக்கர்களுக்கு இலவச மதிய உணவைப் பெற்றுத் தரும் என்று அரசு சார்பு ஊடகங்கள் தெரிவித்து வருவதற்கு மாறாக இந்த நூல் சில அபாரமான புள்ளி விவரங்களை தெரிவிக்கிறது. அதாவது இராக்கில் ஜனநாயகம் மலர, வரி செலுத்தும் ஒவ்வொரு அமெரிக்கனும் 1.7 பில்லியன் டாலர்களை இழக்க வேண்டும் என்று கூறுகிறது இந்த நூல்.

இராக்கில் போரை நடத்துவதற்கான செலவுகள் மட்டும் மாதமொன்றிற்கு 12.5 பில்லியன் டாலர்கள். ஆப்கானிஸ்தானையும் சேர்த்துக் கொண்டால் 16 பில்லியன் டாலர்கள்.

16 பில்லியன் டாலர்கள் (16 x 100 x 40 கோடி) என்பது ஐ. நா. வின் ஆண்டு பட்ஜெட். உலக சுகாதாரக் கழகத்தின் ஆண்டு பட்ஜெட் தொகையைக் காட்டிலும் இது 4 மடங்கு அதிகம். ஆப்ரிக்க நாட்டிற்கு அமெரிக்கா மாதம் ஒன்றுக்கு அளிக்கும் தொகையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். மேலும் உலகம் முழுதும் கல்வியின்மையைப் போக்க செலவு செய்யும் தொகையைக் காட்டிலும் 2 மடங்கு அதிகம்.

webdunia
webdunia photoWD
இந்த 16 பில்லியன் டாலர் தொகை வெறும் போரை நடத்துவதற்கான அன்றாட செலவுகள் மட்டுமே. நிர்வாக செலவுகள் என்று காட்டப்படும் கணக்குகள் ஒரு ஏமாற்று வேலை

..என்று கூறுகிறது இந்த நூல். அதாவது தற்போது செலவு செய்யும் தொகைகளுக்கு மட்டுமே கணக்கு காண்பிக்கப்படுகிறது. எதிர்காலத் திட்டங்களுக்கு செலவிடப்படும் அதிகமான தொகைகள் கணக்கு புத்தகங்களுக்கு வருவதில்லை என்று இந்த நூல் அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

முதல் வளைகுடாப் போரில் ஈடுபட்ட 7 லட்சம் அமெரிக்க போர் வீரர்களில் 45 விழுக்காடு ஊனமுற்றோர் இழப்பீட்டுத் தொகை கோரியுள்ளனர். இந்த 45 விழுக்காட்டினரில் 88 விழுக்காட்டினருக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மட்டுமே ஆண்டொன்றிற்கு 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது.

webdunia
webdunia photoWD
இதுவரை இராக் போருக்கு பலியானதாகக் கூறப்படும் அமெரிக்க போர் வீரர்களின் எண்ணிக்கை 4,000 என்றால், இதற்காக கொடுக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை தற்போது 28 பில்லியன் டாலர்களாக உள்ளது.

இந்த போருக்காக உண்மையில் செலவிடப்படும் அதிர்ச்சியளிக்கும் தொகை விவரங்களை நிர்வாகம் திறம்பட மறைத்து வருகிறது என்றும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற ஆய்விலிருந்தும் தப்பித்து வருகிறது என்று‌ம் இந்த நூல் கூறுகிறது.

மிகவும் மரபான ஒரு கணக்கீட்டின் படி பார்த்தாலே இராக் போர் ஓரு 3 ட்ரில்லியன் டாலர் போர் என்று கூறும் இந்த நூல் அமெரிக்க பொருளாதாரம் தாங்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நூல் அமெரிக்காவின் எதிர்கால அயலுறவுக் கொள்கைகளை மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil