“கச்சத் தீவு ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒப்பந்தம், தகுந்த காரணங்கள் இல்லாமல் அதனை மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது” என்று ஏதோ ஒரு மதத்தின் புனித நூலிற்கு தரப்படும் மரியாதையுடன் பேசினார் மக்களவையில் இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.
1983ஆம் ஆண்டு முதல் சிறிலங்க கடற்படையினரால் பல நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது நமது நாட்டின் அயலுறவு அமைச்சருக்கு ‘தகுந்த காரணமாக’த் தெரியவில்லை! தமிழக மீனவர்களுக்காக எந்தக் கரிசனமும் காட்டாத அமைச்சர் கிருஷ்ணா, அதற்குக் காரணமான கச்சத் தீவு - கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தத்தை காப்பாற்றுவதில் உறுதியாக நின்றார். இது இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வு, யாரும் மறந்திருக்க முடியாது.
இந்திய அரசாலும், காங்கிரஸ் கட்சியாலும் இவ்வளவு ‘ஆழமாக’ மதிக்கப்படும் கச்சத் தீவு ஒப்பந்தம் உருவான வரலாற்றை தெரிந்து கொண்டால், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமை பறிக்கப்படக் காரணமான கச்சத் தீவை எவ்வாறு மோசடியான வழிமுறையைக் கையாண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசு என்பது தெளிவாகும்.
ஆனால் இந்தத் தெளிவைப் பெற, அந்த ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை வெளிகொணர முழுமையான ஒரு புத்தகம் இதுவரை இல்லாமல் இருந்தது. அந்த குறையைத் தீர்த்துள்ளது ‘நமது கச்சத் தீவு’.
மகத்தான ஆய்வுப் பணி
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டுத் தொல்லியல் துறையில் பேராசிரியராகவும், பின் துறைத் தலைவராகவும் 16 ஆண்டுக்காலம் பணியாற்றி ஓய்வுப் பெற்ற அறிஞர் முனைவர் செ. இராசு இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
‘நமது கச்சத் தீவு’ ஒரு புத்தகம் என்று கூறுவதைவிட, கச்சத் தீவுத் தொடர்பான வரலாற்று ஆவணமாகவும், அது தமிழ்நாட்டிற்கே சொந்தமானது என்பதை ஆணித்தரமாக நீரூபிக்க நீதிமன்றத்தில் முன்மொழியும் வாக்குமூலமாகவும் உள்ளது.
கச்சத் தீவு இராமநாதபுரம் சேதுபதி அரசாட்சிக்கு உட்பட்ட ஜமீன் சொத்தாகத்தான் இருந்து வந்துள்ளது என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அறிஞர் இராசு தொகுத்தளித்துள்ளார்.
சேதுபதி சீமையின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாக 1605ஆம் ஆண்டு முதல் கச்சத் தீவு இருந்து வருவதற்கான வரலாற்றையும். ஆவணங்களை தொகுத்து வழங்கியுள்ளார் அறிஞர் இராசு.“கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சீதையை மீட்க இராமன் செல்லும்போது கட்டிய பாலமே ‘சேது’ என்று சொல்லப்படுகிறது. அதைப் பாதுகாத்த மறவர் வழியினரே ‘சேதுபதிகள்’ என்றழைக்கப்பட்டனர்.சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது” என்று கூறியதோடு நில்லாமல், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலுக்கும் கச்சத் தீவிற்கும் உள்ள உறவையும் எடுத்துக் கூறியுள்ளார் அறிஞர் இராசு.“சேதுபதிக்குரியது இராமேசுவரம் இராமநாத சுவாமி மலைவளர் காதலி அம்மை ஆலயம். அந்த ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத் தீவில் இருந்தது. அங்கிருந்து கோயில் பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன. இராமேசுவரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத் தீவில் மேய்சலுக்கு விடப்பட்டதன. இராமநாத சுவாமி கோயில் அபிடேகத்திற்கு பாலும், தேவையான பஞ்சகவ்யங்களும் வந்தன. இவைபற்றி இலங்கை தினகரன் நாளேட்டில் 01.05.1975 அன்று விரிவான கட்டுரை வந்துள்ளது” என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.தமிழ்நாடு வெள்ளையரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர் என்றும், அவர் 1803 பட்டம் ஏற்று 1812 வரை நிர்வாகம் செய்தார் என்ற வரலாற்றையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார்.அதுமட்டுமல்ல, கச்சத் தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்தார் என்பதை, இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்ததையும், அது இலங்கையில் இருந்து வெளிவரும் ‘டெய்லி மிர்ரர்’ நாளிதழிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வெளியிடப்பட்ட ஆதாரங்களையும் இப்புத்தகத்தில் கொண்டு வந்துள்ளார்.1880
ஆம் ஆண்டு கச்சத் தீவு குத்தகைக்கு விடப்பட்ட வரலாறு மற்றும் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குத்தகை ஆவணத்தை முழுமையாக அளித்துள்ளார் கல்வெட்டறிஞர் இராசு.
“கச்சத் தீவு இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்தது” என்று குறிப்பிட்டே 23.06.1880இல் பதிவு செய்யப்பட்ட அந்த ஆவணம் கூறுகிறது என்று சொல்லி, “இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த 8 கடற்கரை கிராமங்களையும், கச்சத் தீவு, மண்ணாளித் தீவு, முயல் தீவு, குத்துக்கால் தீவு ஆகிய நான்கு தீவுகளையும் இராமநாதபுரம், மதுரை மாவட்டச் சிறப்பு ஆட்சியர் எட்வர்டு டர்னர் அவர்களிடமிருந்து, கீழக்கரை சாயபு மாப்பிள்ளை மரக்காயர் மகன் ஜனாப் முகம்மது அப்துல் காதர் மரக்காயர் அவர்களும், இராமசாமிப் பிள்ளை மகன் முத்துசாமிப் பிள்ளையும் கூட்டாக வருடம் ஒன்றுக்கு எழுநூறு ரூபாய் குத்தகை எடுத்தனர். அதற்குரிய பத்திரம் இராமநாதபுரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் 02.07.1880 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது (பதிவு எண்: 510 / 1880, புத்தகம் 1, 16ஆம் வால்யூம்) என்று குறித்துள்ளதை சொல்லிவிட்டுச் செல்லாமல், அந்த ஆவணத்தின் நகலை தனது புத்தகத்தில் முழுமையாக அளித்துள்ளார் இராசு.
இந்திய அரசு இழைத்த அநீதி!
வரலாறு, சட்ட ரீதியான இத்தனை ஆவண ஆதாரங்கள் இருந்தும், அதனை இரு நாடுகளுக்கு இடையிலான தகராறுக்கு உட்பட்டப் பகுதி என்று 1956இல் நேரு பேசினார்.
கச்சத் தீவிற்கு இலங்கை சொந்தம் கொண்டாடுகின்றதே, அது இந்தியாவிற்கு உரியதல்லவா என்று திருச்சி நாடாளுமன்றப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர் அனந்தன் நம்பியார் நாடாளுமன்றத்தில் பேசியபோது, அவருக்கு பதிலளித்து நேரு இவ்வாறு கூறியுள்ளார்:
“போதிய செய்திகள் இந்த விவகாரம் பற்றி இந்திய அரசிடம் இல்லை. கச்சத் தீவு பற்றிய குறிப்பேடுகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த சின்னஞ்சிறு தீவு பற்றி இரு நாடுகளும் போராட வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. கச்சத் தீவுச் சிக்கலால் இந்தியாவின் தன்மானம் இழக்கப்படவில்லை. சி்றிலங்க நமது அண்டை நாடு, அந்த நாட்டோடு உறவோடு இருப்போம்”.
1974ஆம் ஆண்டு மிக இரகசியமாக கையெழுத்திடப்பட்டு கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டப் பிறகு, அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தையும், அதில் தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் இரா. செழியன், ஜி.விஸ்வநாதன், நாஞ்சி்ல் மனோகரன், பி.கே. மூக்கையாத் தேவர், எஸ்.எம். முகமது ஷெரீப் ஆகியோர் முன்வைத்த வாதங்களின் விவரங்கள் அனைத்தும் இப்புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
கச்சத் தீவை தங்களுடையதே என்று இலங்கை அரசு உரிமை கொண்டாடுவதற்கு பின்னணியாக இருந்த வேறு பல காரணங்களையும் இப்புத்தகத்தில் அளித்துள்ளார் இராசு. 1955,56ஆம் ஆண்டுகளிலேயே அத் தீவில் இலங்கை படையினர் அத்துமீறி வந்து படைப் பயிற்சி செய்தபோதும் இந்திய அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், ”பயிற்சியை ஒத்துப் போடுக” என்று மட்டும் கூறி அறிக்கை விட்டதையும் இராசு சுட்டிக் காட்டியுள்ளார்.1974
ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1976ஆம் ஆண்டு இரு நாடுகளின் அயலுறவுச் செயலர்கள் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து விவரத்தையும் இப்புத்தகத்தில் தந்துள்ளார். அதில் அதுநாள் வரை கச்சத் தீவு கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் அனுபவித்துவந்த மீன் பிடி உரிமை விட்டுத் தரப்பட்ட விவரம் உள்ளது!பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள தீவுகளின் மீது தங்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்ற நாடுகளின் விவரங்களையும் இதில் தொகுத்தளித்துள்ளார் இராசு. தமிழனின் உரிமைப் போராட்டத்தின் பலத்தை நிரூபிக்கும் இந்தப் புத்தகத்தை ஈரோடு புதுமலர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டாளரும், மனித உரிமைத் தளத்தில் தீவிரமாக செயல்பட்டுவருபவருமான கண. குறிஞ்சி, ஒரு முக்கிய விவரத்தை தனது பதிப்புரையில் அளித்துள்ளார்.“தனுஷ்கோடி முதல் மன்னார் வரையில் 18 தீவுத் திட்டுக்கள் உள்ளன. மன்னாருக்கு அருகில் உள்ள குல்லாக்காரன் மணல் திட்டுத் தவிர, மற்ற 17 மணல் திட்டுகளும் தமிழகத்திற்குச் சொந்தமாக இருந்தது. ஆனால் தற்பொழுது (கச்சத் தீவு ஒப்பந்தத்திற்குப் பிறகு) 6 திட்டுக்கள் மட்டுமே இந்தியாவிற்குச் சொந்தமாக உள்ளது” என்று கூறியுள்ள கண. குறிஞ்சி, கச்சத் தீவைப் பொட்டல் திட்டு என்றும், அதனால் இந்தியாவிற்கு ஒன்றும் பெரிய இழப்பு ஏற்பட்டுவிடவில்லை என்றும் கூறப்படும் வாதத்திற்குப் பதிலாக, “ஐரோப்பாவில் உள்ள பால்கன் எனுமிடத்தில் மீன் வளம் அதிகம் உள்ளதுபோல் கோடியக் கரையிலிருந்து தனுஷ்கோடி வரை அமைந்த கடல் பகுதியாகிய பாக் நீரிணைப் பகுதியிலும் மீன் வளம் அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது. கோடியக்கரை பகுதியில் திரிஸ்ஸோசிஸ் (Thrissocies) என்று சொல்லக்கூடிய மீன்களுக்கு உணவாகக் கூடிய சிறு மீன்கள் இப்பகுதியில் கிடைக்கிறது. இந்த இறை மீனை நாடி, எண்ணற்ற மீன் இப்பகுதிக்கு வருகின்றன. இதனால் இந்தப் பகுதியை பெட்ரோ பாங்க் என அழைக்கிறார்கள். இலங்கை மீனவர்கள் இந்த இடத்தை பேதுரு பண்ணை என்றழைக்கின்றனர். இப்படிப்பட்ட மீன் வளம் நிறைந்த கச்சத் தீவுப் பகுதியை தமிழகம் இழந்து நிற்கிறது” என்று கூறியுள்ளார்.எனவே எல்லா விதத்திலும் தமிழகத்தின் உரிமையை, தமிழ் மீனவனின் வாழ்வுரிமையை ஒரு ஒப்பந்தம் போட்டு இந்திய அரசு பறித்துவிட்டதை இப்புத்தகம் தெட்டத் தெளிவாக விளக்குகிறது. புத்தகக் குறிப்பு: நூலின் பெயர் : நமது கச்சத் தீவுஆசிரியர் : முனைவர் செ. இராசுவெளியீடு : புதுமலர் பதிப்பகம், 10/176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம் (அஞ்சல்), ஈரோடு - 638 004.மின் அஞ்சல் : [email protected] பேசி: 94433 07681