மாமுயற்சி இது என்று பாராட்டினாலும், அந்த வார்த்தைகள் போதாது என்று சொல்லத் தோன்றுகிறது. ஈழத்தில் ‘வெற்றிகரமா க’ நடத்தி முடிக்கப்பட்ட தமிழினப் படுகொலையை இன்று வரை உலகத்தின் ஒரு நாடு கூட அங்கீகரித்திராத நிலையில், இந்தப் படங்களின் தொகுப்பை பார்ப்போரிடம் - இது இனப் படுகொலை இல்லையென்றால், இதற்குப் பெயர்தான் என்ன? என்று எளிமையாக வினவலாம். மனிதாபிமானமுள்ள எந்த நெஞ்சத்தாலும் இதிலுள்ள அனைத்துப் படங்களையும் பார்த்து முடிக்க இயலாது. ஏனெனில் ஒன்று, அனைத்தையும் பார்க்கும் வலிமை அப்படிப்பட்ட மனிதாபிமான உள்ளங்களுக்கு இருக்காது அல்லது அந்தப் படங்களை பார்க்கும்போது கண்களில் சுரக்கும் கண்ணீர் மேற்கொண்டு பார்க்கவிடாது.
ஆயினும் இது ஒரு சோகத்தின் தொகுப்பல்ல என்பதை ஒவ்வொரு படத்தின் கீழ் உள்ள வாசகங்களும் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. அந்த இடத்தில்தான் படங்கள் பேசியதை விட அந்த எழுத்துக்கள் பேசுகின்றன. அவை பல வினாக்களை எழுப்புகின்றன. அதில் 1956 முதல் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள இனவெறி அரசுகளின் இனப் படுகொலைத் திட்டம் ( Genocide intent) பட்டவர்த்தனமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்களுக்கு எதிராக போர்க் குற்றங்கள் ( War Crimes) இழைக்கப்பட்டுள்ளது என்றும், போருக்கு பின் வன்னி முகாம்களில் தஞ்சம் அடைந்த ஈழத் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ( Crime against Humanity) என்றும், தான் காபாற்ற வேண்டிய மக்களையே கொன்றுக் குவித்த பொறுப்பற்ற அரசு ( Responsibility to Protect) என்றும ் ஐ.நா.வின் பல்வேறு பிரகடனங்களை சுட்டிக்காட்டி மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்க அரசை உலக அளவில் பேசப்படும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் மீது குற்றங்களாக ஒவ்வொரு நாளும் சொல்லி வருகின்றன. ஆனால் ஒரு மனித உரிமை அமைப்பும் அங்கு நடந்தது திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பு என்பதைச் சொல்லவில்லையே! ஐ.நா.வின் மிக முக்கியமான பன்னாட்டு பிரகடனம் ( Convention on Crime and Punishment for Genocide) இனப் படுகொலைக்கு எதிரானது அல்லவா?
எந்த நாடும் பேசவில்லை, அதனால்தான் அந்த இன அழிப்பிற்கு உதவிய நாடுகளில் ஒன்றான இந்தியாவின் நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இராசா இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்று சொல்லிய அடுத்த கணம், ‘Genocide’ என்ற அந்த வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிடுகிறார். இப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் தமிழினப் படுகொலை தொடர்பான இந்தத் தொகுப்பை உருவாக்கத் தங்களைத் தூண்டியது என்று இப்புத்தகத்தை உருவாக்கிய குழுவிற்குத் தலைமையேற்ற நூலாசிரியர் ஜெ. பிரபாகரன் கூறியது மறுக்க முடியாதது!
தமிழர்களிடையே மட்டும் கொண்டு செல்வதால் இதற்கு பெரிதாக எந்தப் பயனும் கிடைக்காது என்பதை உணர்ந்தே, இப்படங்கள் வெளிப்படுத்தும் உண்மைகளை ஆங்கில, பிரென்சு மொழிகளிலும் அளித்துள்ளனர். உண்மைகள் மொழியால் ஊமையாவதை இரண்டு உலக மொழிகளைக் கொண்டு தடுத்துள்ளனர்.
இறுதிக் கட்டப் போரில் இருபதனாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையை உலகத்தின் கண்களுக்கும் காதுகளுக்கும் கொண்டு சென்றவை லண்டனில் இருந்து வெளிவரும் தி டைம்ஸ் ஆங்கில நாளிதழும், பாரிசில் இருந்து வெளிவரும் லீ மாண்ட் என்ற பிரெஞ்ச் மொழி நாளிதழும் அல்லவா, அந்த இரு மொழிகளையே தமிழினப் படுகொலையை பரைசாற்ற பயன்படுத்தியிருப்பது மிகச் சரியாக செயலாகும்.
இந்தப் படத் தொகுப்புப் புத்தகம் ஈழப் போர் 4 தொடர்பான படங்களை மட்டுமே கொண்டதல்ல, அது அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிங்கள இனவெறிக்கு பலியான தமிழர்களின் துயரத்தைத் தாங்கியதாகவும். உலக மக்களைப்போல் கண்ணியமிக்க ஒரு சுதந்திர வாழ்வைப் பெற தங்கள் மண்ணின் விடுதலைக்காக போராடிய தமிழ் மக்கள் எதிர்கொண்ட துயரத்தின் தொகுப்பாகும்.
அதுமட்டுமின்றி, இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக சிங்கள இனவெறி அரசியல் தொடங்கி வைத்து நடத்திய இனப் படுகொலை வரலாற்று விவரங்கள் பின் இணைப்பாக அளிக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய கண் திறப்பாகும்.
இந்த தொகுப்புப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல், “மனித நேயர்கள் எவரும், அவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும், இனத்தவராக இருந்தாலும், மதத்தவராக இருந்தாலும் இதை அலட்சியப்படுத்த முடியாத ு ” என்று கூறிவிட்ட பிறகே முக்கியமான அந்த வினாவை எழுப்புள்ளனர்.
என்ன செய்யலாம் இதற்காக? தமிழர் மட்டுமல்ல, மனிதர் என்று தன்னை கருதும் ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்க்க வேண்டும்.
புத்தகத்தைப் பெ ற:
நூல் வெளியீட்டுக் குழு,என்ன செய்யலாம் இதற்காக? தமிழ்நாடு.கைபேசி எண்கள ்: 94864 86321 / 90038 27608
www.srilangenocidealbum.com