அதிகாலை – வாழ்க்கையும் விபத்தும்
, செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (21:30 IST)
விபத்து என்றால் அது சாலை விதிகளை மீறுவதாலும், மிதமிஞ்சிய வேகத்தில் வாகனம் செலுத்தப்படுதாலும், குறுகிய சாலையில் எதிரும் புதிருமாக வந்த வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொள்வதாலும் மட்டுமே ஏற்படுவதாக செய்திகளில் இருந்து நாம் அறிந்துவருகிறோம். ஆனால், மேற்கூறப்பட்ட காரணங்கள் அனைத்திற்கும் மேலாக அது வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளில் மனம் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஏற்படுகிறது என்பதை ‘அதிகாலை’ எனு்ம் குறும்படத்தின் மூலம் கவின் ஆண்டனி காட்டியுள்ளார்.
‘அதிகாலை’ என்று இவர் பெயர் வைத்திருக்கும் காரணம் புரிந்துகொள்ளக் கூடியதே. பொதுவாக சாலை விபத்துகள் ஏற்படும் நேரம் அது. நீண்ட தூரம் வாகனத்தைச் செலுத்தி வரும் ஓட்டுனர், அந்த அதிகாலை வேளையில் களைப்பு மிகுதியால் தூங்கம் கண்ணைச் சூழ்ந்து அழுத்த, அப்போது கட்டுப்பாடு தவறுவதால் எதிரில் வரும் வாகனத்துடனோ அல்லது முன்னால் செல்லும் வாகனத்துடனோ அல்லது (பனிக் காலங்களில்) முன்னால் நின்றுக் கொண்டிருக்கும் வாகனத்துடனோ மோதுவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்திற்கும் அதிகாலைக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.ஆனால் கவின் ஆண்டனியின் ‘அதிகாலை’ முற்றிலும் வேறுபட்டது. தகவல் தொழில் துட்ப (ஐ.டி) பட்டம் பெற்ற இளைஞரான கெளதம், திறமையினால் குழுத் தலைவர் (Team Leader) என்ற அளவிற்கு உயர்கிறார். வாழ்க்கைத் தரமும் உயர்கிறது. கடன் பெற்று பல்குடியிருப்பில் ஒரு இல்லத்தையும் வாங்குகிறார். கார் வாங்கி அதில் அன்றாடம் அலுவலகம் சென்று திரும்புகிறார். தங்கையின் படிப்பு முடித்து அவளுக்கு நிறைவாக மணம் முடித்து பார்க்க திட்டமிடுகிறார்.இதற்கிடையே அவருக்கும் ஒரு காதலி வாய்க்கிறார். மகிழ்ச்சியாக போகும் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் பணிக்கு திடீரென்று ஆபத்து ஏற்படுகிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி அவருடைய நிறுவனத்தின் பணி வரவைப் பாதிக்கிறது. ஆட்குறைப்பு செய்ய முற்படுகிறது நிர்வாகம். கெளதம் மட்டுமின்றி, அவருக்குக் கீழ் பணியாற்றும் இளைஞர்களின் பணிகளையும் பறிக்கிறது. தடுக்க முடியாமலும், வேறு வழி புரியாமலும் தவிக்கிறார். ‘ஏன் என்னோடு பேசுவதில்லை’ என்று கைபேசியில் அழைத்த காதலியை அன்புடன் கோபிக்கிறான். பிரச்சனையைக் கூற விருப்பமற்றவனாய் மழுப்புகிறான். அம்மா, தங்கைக்கு ஏமாற்றத்தை தர விரும்பவில்லை. தான் பணியாற்றிய நிறுவனத்தில் கடைசி பணி நாள். அன்று நீண்ட நாள் இருந்து, இரவையும் கழித்துவிட்டு, கனத்த இதயத்துடன் வீட்டை நோக்கி தனது வாகனத்தை செலுத்துகிறான் கெளதம்.பொழுது புலரும் அந்த வேளை, அவனுக்கு எதிர்காலம் இருண்டதாகத் தெரிகிறது.
கனத்த இதயம் கொண்டவனை, அசதியும் அழுத்துகிறது. விழிப்பற்ற மன நிலையை கவலை கவ்வ - அந்த ஒரு நொடியில் சாலையை கடக்க முயன்ற ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதுகிறது கெளதமின் கார்... மீனவச் சேரியில் அந்த இளைஞனின் வாழ்க்கைக்கு ஒரு குறையும் இருப்பதாக அவன் அறியவில்லை. மீனை ஏலத்திற்கு எடுத்து அருகில் உள்ள தெருச் சந்தையில் விற்று, அதில் வரும் வருவாயில் தனது தந்தையையும் காப்பாற்றிக் கொண்டு கெளரவமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் தேசப்பன். இயற்கை அளிக்கும் இளமைக் கொடை தேசப்பனுக்கும் போதுமான அளவிற்கு இருந்தது. பிறகென்ன... அவனுக்கு ஒரு சேரி மயில் காதலி.. எல்லாம் பார்வையில்தான்.. அன்றாடத் தொடராக காதலும் தொடர்கிறது. அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை, முற்றுப் புள்ளி விழுகிறது.