வெகு நாட்களாக கேட்பாரற்றுக் கிடக்கும் சில அநாதைப் பிணங்களை அரசோ அல்லது சேவை அமைப்புகளோ முன்வந்து புதைக்க ஏற்பாடுகள் செய்யும். அனாதைப் பிணங்களுக்குக் கிடைக்கும் அந்த சேவை கூட, ஆள் அடையாளம் தெரிந்த சில உடல்களுக்குக் கிடைப்பதில்லை.
அவர்கள்தான் தீவிரவாதிகள். பல லட்சங்களைப் பெற்றுக் கொண்டு தன் நாட்டின் தூண்டுதலால் இந்தியாவிற்குள் வந்து தீவிரவாத நடவடிக்கையின் மூலம் பல உயிரிகளை பலி வாங்கிய மும்பை தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடலுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், மும்பை தாக்குதலின் போது கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களும் கடந்த 9 மாதங்களாக ஜே. ஜே. மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் உடல்களைப் பாகிஸ்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மராட்டிய உள்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் வலியுறுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பையில் கடல் வழியாக ஊடுருவி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். 164 பேரை பலி கொண்ட இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 9 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.சுட்டுக்கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் உடல்களை அந்நாடு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மராட்டிய மாநில அரசு ஜனவரி மாதத்தில் இருந்தே கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் முன் வராததால் தீவிரவாதிகளின் உடல்கள் ஜே.ஜே ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கில் கடந்த 9 மாதங்களாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.இந்தநிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன் அஜ்மல் கசாப் தனி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், கராச்சியில் இருந்து புறப்பட்டு மும்பையில் தாக்குதல் நடத்தியது வரை அனைத்தையும் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தான். அப்போது அவனும், அவனுடன் வந்த கூட்டாளிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறினான்.கசாப்பின் இந்த வாக்குமூலத்தை முக்கிய ஆதாரமாக கையில் எடுத்திருக்கும் மராட்டிய அரசு, கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கான முயற்சியை வேகப்படுத்தி உள்ளது. இதற்காக பாகிஸ்தானிடம் தீவிரவாதிகளின் உடல்களை பெற்றுக் கொள்ளும்படி மீண்டும் கேட்டுக் கொள்ளப்படும் என்று மராட்டிய உள்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் கூறினார்.ஆரம்பத்தில் இந்த 9 தீவிரவாதிகளின் உடல்களையும் புதைத்து விடுவது என்று அரசு முடிவு செய்தது. ஆனால் தீவிரவாதிகளின் உடல்களை மும்பை மண்ணில் புதைக்க முஸ்லிம் மத குருமார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
தான் வாழும்போது எப்படி வாழ்ந்தோம் என்பதையே பலரது இறுதிச் சடங்குகள் காட்டுகின்றன. இந்த தீவிரவாதிகள் எத்தனை உயிரை பலிவாங்கியிருப்பார்கள். இப்போது இவர்களது உடலை வாங்க ஆள் இல்லை.இருக்கும் இடத்திலும் புதைக்க அனுமதி இல்லை. சொந்த நாடும் எங்களது மக்கள் இல்லை என்று கூறுகிறது. இந்த நிலையில் இந்த உடல்கள் சொல்லும் செய்தி ஒன்றுதான். பணத்திற்காகவோ, சில சுய லாபத்திற்காகவோ மக்களை வேட்டையாடும் பயங்கரவாதத்தைக் கையிலெடுக்கும் ஒவ்வொருவரின் இறுதியும் இப்படித்தான் முடியும். முற்றுப் பெறாமல்.