ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் வீர தீர செயல்கள் புரிந்து உயிர்களைக் காப்பாற்ற துணிந்த சிறார்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டு தோறும் குடியரசு தின விழாவின் போது இந்த சிறார்கள் கெளரவிக்கப்படுவதும் வழக்கம்.
இந்த விருதுகள் துவங்கப்பட்டதற்கு ஒரு சம்பவம்தான் அடிப்படையாக உள்ளது.
அதாவது இந்த வீரதீரச் செயல்களுக்கான தேசிய விருது, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது.
1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2அம் தேதியன்று டெல்லி ராமலீலா மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜவகர்லால் நேரு கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அங்கு மின் கசிவு ஏற்பட்டு துணிப் பந்தல் ஒன்று தீப்பற்றியது.
அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த சிறு கத்தியால் அந்த துணிப் பந்தலில் தீப்பற்றியப் பகுதியை வெட்டி விட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து அங்கிருந்தவர்களைக் காப்பாற்றினான்.
அந்தச் சிறுவனின் வீரத்தால் கவரப்பட்ட நேரு, அந்த நிகழ்ச்சிலேயே அந்த சிறுவனை கெளரவித்தார். அதோடு நாடு முழுவதும் இதுபோன்ற வீரதீரச் செயல்களில் ஈடுபடும் சிறார்களை தேர்ந்தெடுத்து கெளரவிக்க விரும்பினார். இதனை அந்த ஆண்டு மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அந்த ஆண்டில் இருந்தே இந்தியக் குழந்தைகள் நலக் கழகத்தின் சார்பில் சிறார்களுக்கான வீர தீரச் செயல்களுக்கான விருதுகள் உருவாக்கப்பட்டன. மற்றவர்கைள காக்கும் எண்ணத்துடன் தீரத்தோடு செயல்படும் சிறார்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குடியரசு தினத்தன்று பிரதமர் விருதுகளை வழங்கி கெளரவிக்கிறார்.
குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியிலும் யானை மீது அமர்த்தப்பட்டு அவர்கள் அணிவகுத்து வருகின்றனர்.
வீர தீர செயல்களில் ஈடுபட்டு தன்னுயிரை இழந்த சிறார்களுக்கும், அவர்களது குடும்பத்தாரிடம் இந்த விருது வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.