உலகத்திற்கோ இவர்கள் குழந்தை நட்சத்திரங்கள். ஆனால் இன்று இருப்பதோ தெருவோரத்தில்... ஓடாத ஒரு படத்தில் நடித்துவிட்டாலே நம்மூர் ஹீரோயின்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இருக்காது. ஆனால் ஆஸ்கார் வென்ற படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து உலகமே விழிகளை விரித்துப் பார்த்து அந்த நட்சத்திரங்கள் தற்போது மின்னிக் கொண்டிருப்பது என்னவோ குப்பையில்தான்.
ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த மும்பை குடிசைப் பகுதியை சேர்ந்த குழந்தைகள் அசாருதீன் இஸ்மாயில், ரூபினா அலி ஆகியோரது வீடுகள் இடிக்கப்பட்டு தற்போது அவர்கள் தெருவோரத்தில் வசிக்கின்றனர்.
மும்பையில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி பல குடிசைப் பகுதிகள் மாநகராட்சியால் இடித்து தள்ளப்பட்டன. இதனால் அந்த குடிசைகளில் வாழ்ந்து வந்த ஏராளமானோர் தெருவிற்கு வந்தனர். அதில் இந்த குழந்தை நட்சத்திரங்களும் அடங்கும். அவர்களும் தற்போது தெருவோரத்தில் தான் வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை அறிந்த ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் டைரக்டர் டேனி போயல் அவசரமாக நேற்று மும்பை வந்தார். குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குழந்தைகள் அசாருதீன், ரூபினா ஆகியோருடைய இருப்பிட வசதி, கல்வி வசதிக்காக ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அதன் மூலம் அசாருதீனுக்கு ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கப்பட்டுள்ளதாகவும் ரூபினாவுக்கும் விரைவில் ஒரு வீடு வாங்கப்படும் என்றும் அவர் கூறினார்.