13ஆம் எண்ணுக்கு அப்படி என்ன மாய சக்தி இருக்கிறதோ தெரியவில்லை அந்த எண்ணைக் கண்டாலே வெளிநாட்டினர் பலருக்கும் பயம்.
13ஆம் எண் வீடு என்றால் அது பேய் வீடு என்று பயந்து கொண்டிருந்தனர். தற்போது வெள்ளிக்கிழமைகளில் 13ஆம் தேதி வந்தால் பயப்படும் அளவிற்கு அவர்களது பயம் வளர்ந்து விட்டது.
விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவுதான் ஏற்பட்டாலும், முன்னோர்கள் சொன்ன சில விஷயங்களை நாம் இன்னும் அப்படியே நம்பிக்கொண்டுதான் இருக்கிறோம். அதைப்பற்றி ஆராய்வதே கிடையாது. மேலைநாட்டினர் 13-ந் தேதியும், வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்தால், தனது வாழ்க்கையில் பயங்கர சம்பவங்கள் நிகழப்போவதாக அச்சப்படுகின்றனர். அவர்கள் நினைத்தது போல் பல சம்பவங்களும் நடந்துள்ளது.
இதேநிலை, தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் வரும் 13-ந் தேதியை அச்சத்துடனே பலர் எதிர்கொள்கின்றனர். இதை மையமாக வைத்து, `பிரைடே தி தேட்டீன்த்' என்ற ஆங்கில திகில் படமே வந்துள்ளது. நம்மூரில் 13ஆம் நம்பர் வீடு என்று ஒரு பேய் படம் எடுக்கப்பட்டதல்லவா அதுபோலத்தான்.
அதற்கேற்றது போல் பிப்ரவரி 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வர அன்றைய தினத்தை திகிலுடனே கழித்தனர் பலர்.
இதோடு அல்லாமல் இந்த ஆண்டில் மேலும் இரண்டு 13ஆம் தேதிகள் வெள்ளிக்கிழமையில் வருகின்றனவாம். அதாவது மார்ச் 13, நவம்பர் 13 ஆகியவைதான்.
எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் இதுபோன்ற சில மூடப்பழக்க வழக்கங்களை மாற்ற முடியாதவர்களாக இருக்கிறார்கள்.