கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து நேரிட்டு 94 குழந்தைகளை பலிவாங்கியதன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
2004ஆம் ஆண்டு ஜுலை 16-ஆம் தேதி காலை 11 மணியளவில் கிருஷ்ணா பள்ளியில் பற்றியத் தீ 94 சிறார்களின் உயிரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டது.
அந்த துக்க தினத்தின் நினைவு தினமான நேற்று, தீ விபத்தில் இறந்த குழந்தைகள் நினைவாக கும்பகோணம் பழைய பாலக்கரையில் தமிழக அரசு அமைத்துள்ள நினைவுத்தூணுடன் கூடிய நினைவுமண்டபத்தில், குழந்தைகளை இழந்த பெற்றோர்களும், உறவினர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
நினைவு மண்டபத்தில், குழந்தைகளை இழந்த பெற்றவர்கள், குழந்தைகளுக்குப் பிடித்த உணவுப் பொருட்களையும், புத்தாடைகளையும் வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மேலும், தீ விபத்து நேரிட்ட பள்ளியின் வாயிலிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி முன்பு நடைபெற்ற நினைவு அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாலைகள், மலர்களை குழந்தைகளின் உருவப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பலகைக்கு அணிவித்தும், குத்துவிளக்கு ஏற்றியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் சண்முகம், மற்றும் பிற பள்ளி மாணவ மாணவிகளும் தீ விபத்து நடைபெற்ற காசிராமன் தெரு கிருஷ்ணா பள்ளியில் குழந்தைகளின் உருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி மலர்வளையம் வைத்தனர்.
அப்போது, குழந்தைகளை இழந்த பெற்றோர், இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்புத் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.