நமது குழந்தைகளை செல்லமாக வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் அந்த செல்லம் கொடுப்பதால் குழந்தைகளின் நடத்தையில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது. பெரிய பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணும் பெற்றவர்கள், தங்களது குழந்தைக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர்.
நாம் இன்று சந்திக்கும் பல குழந்தைகள் எளிய பழக்க வழக்கங்களைக் கூட பின்பற்றக் கூடியவையாக இருப்பதில்லை. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பெற்றவர்களின் வளர்ப்புத்தான்.
குழந்தைகளுக்கு எப்போது நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது பெற்றவர்களுக்கேத் தெரியாத நிலையில், குழந்தைகள் எப்படி நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.
பெற்றவர்களது நடவடிக்கைகள்தான் மிகவும் முக்கியம். குழந்தைகள் முதலில் நம்மைப் பார்த்துத் தான் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றன. எனவ, சில நல்ல பழக்க வழக்கங்களை நீங்கள் கடைபிடிப்பதன் மூலம் குழந்தைகளுக்கும் அவற்றை எளிதாகக் கற்றுக் கொடுக்கலாம்.
குழந்தைகள் நாம் பேசுவதைக் கேட்கவும், புரிந்து கொள்ளவும் ஆரம்பிக்கும் போதே நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விடலாம். குழந்தைதானே. அவர்களுக்கு என்னத் தெரியும் என்று விட்டு விடுவதை விட, குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது, எனவே நல்ல விஷயங்களை நாம் தான் எடுத்துச் சொல்ல வேண்டும். தவறான விஷயங்களைக் கற்றுக் கொண்ட பிறகு அதற்காக திட்டுவது எந்த விதத்திலும் நியாயமில்லை என்பதை உணருங்கள்.ஆரம்பத்திலேயே நல்லது எது, கெட்டது எது என்பதை எடுத்துச் சொல்லி விடுங்கள். அவர்கள் தவறாக நடந்தாலும் அதற்காக தடுத்து நிறுத்தவோ, திட்டவோ வேண்டாம். தவறான காரியத்தில் ஈடுபட்டு அதன் பலனை அனுபவிக்கும் போது இதற்காகத்தான் இதனை செய்யாதே என்று அறிவுறுத்தினோம் என்று எடுத்துச் சொல்லுங்கள். இப்படி அவர்கள் ஒரு விஷயத்தை அனுபவ ரீதியாக உணரவும் வாய்ப்பு அளியுங்கள்.ஒரு குழந்தையின் வளர்ப்பில் அவர்களது பெற்றவர்கள்தான் தற்போது முக்கிய இடத்தில் உள்ளனர். எனவே, குழந்தைக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டியதும் அவர்கள்தான். ஆனால் குழந்தைகளுக்கு சொல்வது ஒன்றும், தாங்கள் செய்வது ஒன்றுமாக இருக்கக் கூடாது.
பெற்றோர், தங்களிடம் ஏதேனும் குறை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அதனை மாற்றிக் கொள்ளுங்கள். குழந்தைகள் எதிரில் யாரைப் பற்றியும் மரியாதைக் குறைவாகப் பேச வேண்டாம். கடுமையான சொற்களையும் பயன்படுத்த வேண்டாம். முக்கியமாக பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டிய சில நல்ல பழக்க வழக்கங்கள் எவை என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.