நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்றால் நமக்கு முதலில் நம்பிக்கையும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.
மற்றவர்கள் தவறு செய்தால் அதை மன்னிக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் இருப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் மற்றவர்கள் செய்யும் நியாயமான தவறுகளை மன்னிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் மறந்துவிடுங்கள்.
எப்போதும் நம்மை விட தாழ்ந்தவர்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதை விட உயர்ந்தவர்களை ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் பாதையில் முன்னேற முயற்சிக்க வேண்டும். அதாவது, வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும், ஆனால் அதே சமயம் பின்னோக்கியும் பார்க்க வேண்டும்.
எதிரி என்று யாரையும் எண்ணிக் கொள்ளாதீர்கள். அவர்களது செயல் உங்களை துன்புறுத்தினால் அவர்களுடனான தொடர்பை குறைத்துக் கொள்ளுங்கள். அவர்களை பழிவாங்கவோ, தண்டனை அளிக்கவோ முயல வேண்டாம். இதனை கடவுளிடம் விட்டுவிடுங்கள்.
நம்பிக்கையை எப்போதும் இழக்காதீர்கள். நம்பிக்கையை இழந்தவன் நடைபிணம்.
ஒருவன் செய்த தவறுக்காக மற்றொரு தவறால் அவனுக்கு பதில் கூறாதீர்கள்.
பசியோடு வந்தவருக்கு பசி தீருங்கள். தாகத்துடன் வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள். பகைவனாக இருந்தாலும் இதனை மறுக்காதீர்கள்.
மற்றவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகிக்காதீர்கள். உங்களிடம் அன்பை வைத்துக் கொள்ளுங்கள். சாட்டையை இல்லை.
ஒரு மனிதன் செய்த தவறுக்காக அவனது குடும்பத்தையே வெறுப்பதோ தண்டிப்பதோ நியாயமல்ல. தவறுகளை சுட்டிக்காட்டி திருந்த வழி கொடுங்கள்.
நல்லதும், தீயதும் ஒரே நபரிடம் இருப்பதில்லை. இவைகள் எதிரெதிர் பகைவர்கள்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒவ்வொருவரிடமும் குற்றம் பார்த்துக் கொண்டே இருந்தால் உறவுகள் இருக்காது.
இந்த பூமியைப் படைக்கும் போது இறைவன், மனிதர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அது நடக்கவில்லை. இறைவனின் ஆசையே நிறைவேறாதபோது, மனிதனின் ஆசைகள் எம்மாத்திரம். எனவே ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பை விட்டுவிட்டு, லட்சியங்களை அடையும் வழியில் செல்லுங்கள்.
மனிதன் விழலாம். அதில் தவறில்லை. ஆனால் விழுந்தே கிடக்கக் கூடாது.
யாரும் மற்றவர்களை ஏமாற்ற முடியாது. ஒருவன் தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்ள முடியும்.
நீங்கள் தவறு செய்தீர்கள் என்று உணர்ந்தால் மன்னிப்புக் கோருங்கள். மன்னிப்பு தவறைக் குறைக்கும். நியாயப்படுத்துவதால் தவறு இரட்டிப்பாக்கும்.