தொழிலதிபர்கள் பலரும், பல வருட அனுபவங்களைப் பெற்று பின் பல நிறுவனங்களை நிர்வகிக்கும் திறன் பெறுவர். ஆனால், ஒரு 10 வயது சிறுவன் தற்போதே 2 பெரிய நிறுவனங்களை நிர்வகிக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா?
மலேசியாவை சேர்ந்த சிறுவன் அதிபுத்ரா அப்துல் கனிதான் நாம் சொல்லும் தொழிலதிபராவார். இவனுக்கு தற்போது 10 வயது தான் ஆகிறது. இப்போதே இவன் 2 கம்பெனிகளுக்கு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறான்.
வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கும் 2 கம்பெனிகளை அவன் தாயார் நடத்தி வருகிறார். இந்த கம்பெனிகளுக்கு அவனை தலைமை அதிகாரியாக அவன் தாயார்தான் நியமித்து இருக்கிறார். ஏதோ கெளரவத்திற்காகவோ, சொத்து சிக்கலுக்காகவோ அவனை இந்த பதவியில் நியமிக்கவில்லை.
உண்மையிலேயே அவன் பெற்றுள்ள அதீத திறமையின் காரணமாக தான் அவன் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறான். தொழில்துறையில் அவன் பல நுணுக்கங்களை அறிந்தவனாகவும், பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குபவனாகவும் திகழ்கிறான் அப்துல் கனி.
இந்த ஒரே காரணத்திற்காகத்தான் அவனை அவனது தாயார் இந்த பதவிக்கு நியமித்து இருக்கிறார் என்று அறியும் போது ஆச்சரியம் மேலிடுகிறது. அவனது திறமையை அவன் தாயார் மட்டும் அறிந்து இருக்கவில்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் கூட திறமையை மதிக்கின்றனர். அவனது திறமையோடு போட்டி போட முடியாது என்று கூறுகின்றனர்.
இதோடு போகவில்லை அவனது புகழ். அந்த சிறுவனின் திறமை பற்றி அறிந்த பல பல்கலைக்கழகங்கள் அவனை தங்கள் மாணவர்களுக்கு சிறப்புரை நிகழ்த்துவதற்காக அழைக்கின்றன. இதற்காக அவனுக்கு ஒரு மணி நேரத்துக்கு 65 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கவும் முன்வந்துள்ளன பல பல்கலைக்கழகங்கள்.
தொழிலில் மட்டுமல்லாமல், இதுபோன்று சிறப்புரை ஆற்றுவதிலும் ஒரு மாதத்திற்கு பல லட்சங்களை குவித்து வருகிறான் அப்துல் கனி.