சென்னை நகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், செல்பேசி குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் பொதுமக்கள் புகார்களை அனுப்பும் பிரமாண்ட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டம் பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் வரும் புகார்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறுந்தகவல் மூலம் வரும் புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்மீது நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஒரு துணை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை செயல்படுகிறது.இதன்படி தினமும் 100 புகார்கள் வீதம் வருகின்றன. காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவலர்கள் செய்யும் தவறுகள் கூட குறுந்தகவல் மூலம் பொதுமக்கள் ஆணையருக்கு அனுப்பி விடுகிறார்கள். இதில் போக்குவரத்து காவலர்கள் பற்றி தான் அதிகளவில் புகார்கள் வருகின்றன.இந்த புகாரில் முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தைகளின் செல்லப் புகார்கள்தான்.
சில நாட்களுக்கு முன்பு 4 வயது பெண் குழந்தையிடம் இருந்து ஒரு குறுந்தகவல் புகார் வந்தது. அந்த குழந்தை, தனது தாயார் தினமும் தன்னை அடிப்பதாகவும், தாயார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியிருந்தது. உடனே குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று காவல்துறையினர் விசாரித்தார்கள். அந்த குழந்தை, தனது அண்ணன் உதவியோடு அந்த குறுந்தகவலை அனுப்பியிருந்தது தெரிய வந்தது. உடனே காவல்துறையினரும், குழந்தையை அடிக்கக்கூடாது என்று குழந்தையின் தாயாருக்கு கண்டிப்போடு அறிவுரை கூறிவிட்டு வந்தார்கள்.முதல்வன் பட பாணியில் தற்போது குறுந்தகவல் மூலம் புகார் அனுப்பும் திட்டம் வெகு பிரபலமாகியுள்ளது இந்த குழந்தையின் குறுந்தகவலே சாட்சியாகிறது. பெரும்பாலான புகார்களை காவல்துறை ஆணையரே படிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.