குழந்தைகளின் நிலை தற்போது பரிதாபமாக உள்ளது. சிறு வயதிலேயே காதல் வசப்படுவது, போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் அதிகரித்திருப்பதற்குக் காரணம் பெற்றோர்தான் என்கிறார் நமது யோகா ஆசிரியர் சுப்ரமணியம்.
அதாவது, குழந்தைகளை இயல்பான நிலையில் வளர்க்காமல், அவர்களை அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பதும், அளவுக்கதிகமாக செல்லம் கொடுப்பதும் இதுபோன்ற நிலைக்குக் காரணம் என்கிறார்.
மேலும், படிக்கும் வயதில் பள்ளிப் படிப்பு கொடுக்கும் அழுத்தமும், வீட்டிலும் படி படி என்று பெற்றோர் வறுத்தெடுப்பதும், படிப்பு மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பை உண்டாக்கிவிடுகிறது. அதில்லாமல் மேலும் பல வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், அவர்களது மனம் இதுபோன்ற பாதைகளைத் தேடுகிறது.
சிறு வயதிலேயே காதலிப்பது, தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவது போன்றவற்றில் ஒரு மகிழ்ச்சி கிடைப்பதால், அதன் பக்கம் மாணவர்களின் பார்வை திரும்புகிறது.எனவே, பெற்றோர் முதலில் மாற வேண்டும். பிள்ளைகளை அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் அனைவரும் பெரிய பெரிய பதவிகளில் இருக்கிறார்களா? இல்லையே? மதிப்பெண் என்பது பள்ளிப் படிப்போடு முடிந்துவிடும். நமது குழந்தை பாடத்தை எப்படி புரிந்து கொண்டு படிக்கிறான், அவனது ஒழுக்கம், சிறப்பான நடத்தைதான் அவனது வாழ்க்கையை நிச்சயிக்குமேத் தவிர, மதிப்பெண்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றாக படித்து, பெரிய பதவியை அடைந்தாலும், உடல்நிலை நன்றாக இருந்தால் அவர்களால் தங்களது வேலையை சிறப்பாக செய்ய முடியும். எனவே குழந்தைகளுக்கு ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு படிப்பைக் கற்றுத் தரும் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமேத் தவிர, படிப்பைத் திணிக்கும் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், நடிப்பு, பாட்டு, பிற மொழிகள், ஓவியம் என எதையும் நீங்களாகக் கற்றுக் கொடுக்காதீர்கள். அவர்கள் ஒரு காகிதத்தை எடுத்து வரைய ஆரம்பித்ததும், என் குழந்தைக்கு ஓவியத்தில் ஆர்வம் என்று ஓவியப் பள்ளியில் சேர்த்துவிட்டீர்களானால், குழந்தையின் ஓவிய ஆர்வமே போய்விடும்.
குழந்தை முதலில் பார்க்கும் பொருட்களை நன்றாக வரைய முயற்சிக்கும். அந்த முயற்சிக்கு ஊக்குவிப்பைக் கொடுங்கள். தொடர்ந்து வரைய ஆர்வமூட்டுங்கள். எப்போது இதை எப்படி வரைய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லைக் கற்றுக் கொடுங்கள் என்று கூறுகிறதோ, அப்போது, ஒரு நல்ல ஆசிரியரிடம் அனுப்புங்கள்.
எந்த ஆர்வமும் முதலில் அவர்களுக்குள்ளிருந்து வர வேண்டும். அதில் அவர்கள் முழுமை பெற்று தேடல் ஆரம்பிக்கும்போதுதான் அவர்களுக்கு அதன் மீது பயிற்சி ஆரம்பிக்க வேண்டும்.