இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள், பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளை மிகவும் கண்டிக்கிறார். ஒரு முறை, அவன் மூக்கு மண்ணாகட்டும் என்று மூன்று முறை கூறினார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர், யாரை இப்படி கடிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) முதுமைப் பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ, இருவரையுமோ பெற்றிருந்தும், அவர்களுக்குப் பணிவிடை செய்து கவனம் செல்லாதவன் என்று அண்ணலார் பதிலளித்தார்.
யாரையும் தன் வாயால் சபிக்காத அண்ணலார், ஒருவரை திட்டுவார் என்றால், அது மன்னிக்கக் கூடிய தவறாக இருக்காது. அப்படி அவர் திட்டினார் என்றால் அந்த தவறிற்கு மன்னிப்பேக் கிடையாது என்றுதான் பொருள்படும். அந்த அளவிற்கு மோசமான தவறுதான் தாய் தந்தையை கவனிக்காமல் விடுதலாம்.
தாய், தந்தையரைக் கருணையுடன் ஒரு முறை பார்ப்பவருக்கு ஒரு ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்று அண்ணலார் சொன்னதைக் கேட்ட நபித் தோழர், இறைத் தூதர் அவர்களே, ஒரு நாளைக்கு நூறு முறை என் தாய், தந்தையரைக் கருணையுடன் பார்த்தால் எனக்கு நூறு முறை ஹஜ் செய்த நன்மை கிடைக்குமா என்று கேட்டார்.
அதற்கு அண்ணலார், ஆம் என்று பதிலளித்தார்.
மற்றொரு முறை, இறைத் தூதரிடம் ஒருவர் வந்து, என் தாய் தந்தையர் இறந்துவிட்டனர். அவர்கள் இறந்து போன பிறகும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை என எனக்கு ஏதேனும் உள்ளதா என்று கேட்டார்.
அதற்கு அண்ணலார் அளித்த பதிலில், ஆம், அவர்களுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள், அவர்களுடை கடைசி ஆசைகளை நிறைவேற்றுங்கள், உங்கள் தாய், தந்தை வழி உறவுகளை துண்டிக்காமல் வாழுங்கள், தாய் தந்தையரின் நண்பர்களுக்கு உதவுங்கள் என்றார்.
மேலும், நம்முடைய சொர்கமும், நரகமும் தாய், தந்தையர்தாம் என்பதை உணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து ஈருலகிலும் ஈடேற்றம் பெற வழிகாண்போம்.