என்னதான் இரண்டு கைகளும், கால்களும் இருந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால்தான் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் கை, கால்களே இல்லாத நிக் வூஜிசிக் என்பவர்.ஆஸ்ட்ரேலியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் நிக் வூஜிசிக்கிற்கு 26 வயதாகிறது. பிறப்பிலேயே கைகளும், கால்களும் இல்லை. கால்களுக்குப் பதிலாக சிறு துடுப்புப் போன்ற பகுதி ஒன்று மட்டும் உள்ளது. ஆனால் இவர் செய்யாத வேலையே இல்லை. கால்பந்து விளையாடுகிறார், அருமையாக கோல்ப் விளையாடுகிறார், டைவ் அடித்து நீச்சல் குளத்தில் நீந்துகிறார், எழுதுகிறார், தானாகவே படகு சவாரி செய்கிறார்.
அவரது இடது பக்க இடுப்புக்கு கீழே இருக்கும் அந்த சதைத்துண்டை வைத்துத்தான் அவர் இவ்வளவையும் செய்கிறார். இந்த சதைத் துண்டால் பந்தை உதைக்கிறார், தரையில் நின்று கொண்டு டைவ் அடிக்கிறார், பேனா பிடித்து எழுதுகிறார்.. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவர் நீச்சல் அடிப்பது பற்றி குறிப்பிடும்போது, பொதுவாக மனிதர்கள் தண்ணீரில் விழுந்ததும் உள்ளே இழுத்துச் செல்லப்படுவார்கள். ஆனால் எனது உடல் அமைப்போ தண்ணீரில் மிதக்கிறது. ஏன் என்றால், எனது உடலில் 80 விழுக்காடு நுரையீரல் போன்ற அமைப்புதான் உள்ளது. மேலும், என் கால் போன்ற பாகம் துடுப்பு போன்று செயல்பட்டு தண்ணீரை வேகமாக பின்னோக்கித் தள்ளும். எனவே தான் என்னால் சிறப்பாக நீச்சலிடிக்க முடிகிறது.
நான் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த போதே என் தந்தை தண்ணீரில் தூக்கிப் போடுவார். நீச்சல் அடிக்க அவர்தான் கற்றுக் கொடுத்தார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
இவ்வளவுக் கலையும் தன்வசம் வைத்துக் கொண்டிருக்கும் இவருக்கு பல காதலிகளும் இருக்கிறார்களாம்.
எப்போ கல்யாணம் என்றதும் வெட்கத்துடன் நல்ல பெண்ணாக கிடைக்க வேண்டுமே என்கிறார்?!