குழந்தைகள் முன்பு சிகரெட் பிடிப்பது, வீட்டில் மதுபானங்களை வாங்கி வந்து குடிப்பது போன்றவற்றை பெரியவர்கள் தவிர்த்து விட வேண்டும்.
மேலும், சிகரெட் எப்படி பிடிப்பது என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது அல்லது அது யாரையேனும் பார்த்து செய்தால் அதைப் பார்த்து சிரிப்பது போன்றவற்றையும் பெற்றவர்கள் தவிர்க்க வேண்டும்.
இதனால் சிகரெட் பிடிப்பது என்பது ஒரு நல்ல விஷயமாகவோ அல்லது பாராட்டத்தக்க விஷயமாகவோ குழந்தையின் உள்ளத்தில் பதிந்து விடும். தவறான விஷயங்களை எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டிய நாமே, குழந்தைகள் தவறான விஷயங்களை கற்றுக் கொள்ள இடம் தந்து விடக் கூடாது.
தவறான படங்களை சினிமாவில் பார்ப்பது, தவறான புத்தகங்களை வீட்டிற்கு வாங்கி வருவதும் மிகவும் தவறான நடவடிக்கையாகும். குழந்தைக்கு தெரியாத இடத்தில் வைப்பதாக நினைத்துக் கொண்டு இதுபோன்ற புத்தகங்களை நீங்கள் வைத்தாலும் அது எந்தவிதத்திலாவது குழந்தைகள் கையில் கிடைத்தால், உங்களது நடவடிக்கையே அவர்களை தவறான பாதைக்குக் கொண்டு செல்லும் கருவியாக மாறிவிடும்.
தாய் தந்தையைப் பார்த்துத்தான் குழந்தைகள் வளர்கின்றன. எனவே, நீங்கள் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக இருப்பவராக இருப்பின், முதலில் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். அதுவரை, உங்களுக்குள்ள கெட்ட பழக்கங்கள் குறித்து உங்கள் குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்குமாறாவது பார்த்துக் கொள்ளுங்கள்.
வீட்டிற்கு வரும் உறவினர்களும், பெரியவர்களும் கூட, வீட்டில் புகைக்கவோ, மது அருந்தவோ அனுமதிக்காதீர்கள். வெளியில் சென்று புகைக்குமாறு அறிவுறுத்துங்கள். இது ஆரோக்கியத்திற்கும், ஆரோக்கியமான பழக்க வழக்கத்திற்கும் ஏற்றது.
அடிக்கடி சண்டையிடும் தம்பதிகளின் வீட்டிற்கு செல்லவோ, தவறான பேச்சுக்களைப் பேசும் குழந்தைகளுடன் விளையாடவோ அனுமதிக்காதீர்கள்.
குழந்தைகள் இருக்கும் நேரத்தில் மோசமான சினிமாக்களையும், தொடர்களையும் பார்க்க வேண்டாம். சில மோசமான வார்த்தைகளை குழந்தைகள் டிவி மூலமாகத்தான் கற்றுக் கொள்கின்றன. அறிவுப் பூர்வமான விஷயங்களையும், குழந்தைகளுக்கான நிக்ழச்சிகளை மட்டும் பார்க்க குழந்தைகளை ஊக்குவிப்பது நல்லது.
புத்தகங்களைப் படிக்க உற்சாகப்படுத்துங்கள். நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுத்து படிக்க அவர்களுக்கு உதவுங்கள். திருக்குறள், பாரதியார் பாடல்கள் போன்றவற்றை வீட்டில் வைத்திருந்து அவ்வப்போது அவற்றைப் படித்துக் காண்பியுங்கள்.
தாய் மொழியை படிக்கவும் எழுதவும் தெரியுமாறு உங்கள் குழந்தையை வளர்ப்பது மிகவும் நல்லது. என்னதான் மற்ற மொழிகளில் வல்லவராக இருப்பினும் சிந்திக்க உதவுவது தாய் மொழிதான். எனவே தாய்மொழிக்கு முக்கியத்தும் தாருங்கள்.