தற்போதைய காலத்தில் குழந்தைகளின் நிலை மிக மோசமாக உள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது.
பெற்றோர் தங்களது ஆசைகளை எல்லாம், தங்களது பிள்ளைகள் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவர்களை ஏராளமான பயிற்சி வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர்.
குழந்தைகளை சுதந்திரமாக விளையாட விட வேண்டியது மிகவும் முக்கியம். குழந்தை ஓடி விளையாட வேண்டும். ஓடும் போது விழுந்து அடிபட்டாலும் நல்லதுதான். பொதுவாக குழந்தைகளுக்கு அடிபட வேண்டும். அடிபட்டால்தான் குழந்தைகளின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகள் செயல்படும். உடலில் செயல்படாத எந்த விஷயமும் வீணற்றுப் போய்விடும்.
அதேப்போல, குழந்தைகள் மண்ணில் விளையாடுவதால், அவர்களுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும் என்று தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொண்டால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியே வேலை செய்யாமல் போய்விடும். மண்ணில் விளையாடும் போது அதில் இருக்கும் தீயவைகளுடன் நோய் எதிர்ப்புச் சக்தி போரிட்டு அழித்து, நல்லதை மட்டும் உடலுக்கு சேர்க்கிறது.
இதுவரைக்கும் நோயே வந்ததில்லை. இவ்வளவு சீக்கிரம் இறந்துவிட்டாரே என்று சொல்வார்கள். ஏனென்றால் நோய் எதுவும் வராமல் இருக்கும் போது, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் பயனற்றுப் போகும். அதனால் அவர்களது உடலில் எந்த நோய் வந்தாலும் அதனை எதிர்க்க எதிர்ப்புச் சக்திகள் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை, குடிநீரும், சிறுநீரும்தான். நிறைய குழந்தைகள் ஒரு சின்ன தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அதில் உள்ள நீரை மட்டுமே ஒரு நாள் முழுவதும் குடிக்கிறார்கள். அதிகமாக தண்ணீர் குடிக்கவும் பயம். ஏன் என்றால் அடிக்கடி சிறுநீர் கழிக்க முடியாது. பள்ளியில் இடைவேளை விடும் போது மட்டுமே சிறுநீர் கழிக்க முடியும். அந்த சமயத்தில் கழிவறையில் அதிகமான பிள்ளைகள் முட்டி மோதிக் கொண்டு செல்வார்கள்.
இதனால் பல குழந்தைகள் தண்ணீர் குடிப்பதையே குறைத்துக் கொள்கிறார்கள். இதனையும் பள்ளி நிர்வாகம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு உடலுக்கு அதிக ஊட்டச்சத்து மிக்க உணவுகளைக் கொடுக்கும் தாய்மார்கள், அவர்களது உடலுக்கு அடிப்படையான நீரை அதிகமாக பருகக் கொடுங்கள். வீட்டில் இருக்கும் போது அதிகமான நீரை அருந்துவதும், அவ்வப்போது சிறுநீர் கழிக்கவும் பழக்கி விடுங்கள்.
மேலும், ஒவ்வொரு குழந்தையும் சிறுநீர் கழித்ததும் தண்ணீர் ஊற்றும் வசதியும் பல பள்ளிகளில் இருப்பதில்லை. ஒரு குழந்தை சிறுநீர் கழித்ததும், அந்த இடத்தில் மற்றொரு குழந்தை சிறுநீர் கழிக்கச் சென்றால், முதல் குழந்தைக்கு இருந்த பல நோய்கள் இரண்டாவது குழந்தைக்குத் தாக்கும் அபாயம் உள்ளது.
இதனால்தான் பல பள்ளிகளில் குழந்தைகளுக்கு சிறுநீர்க் கிருமித் தொற்று நோய் ஏற்படுகிறது. சிறுநீரில் இருக்கும் கிருமி உடலில் இருந்து வெளியேறினாலும் 58 நொடிகள் உயிரோடு இருக்கும். அது மற்றொரு குழந்தையின் உடலுக்குள் சென்றதும் தனது வேலையைத் துவக்க ஆரம்பித்து விடும்.
ஒரு குழந்தை போகும் சிறுநீர், மற்றொரு குழந்தையின் காலில் பட்டாலே அதன் வழியாக பல நோய்கள் குழந்தையைத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுவிடும்.
இந்த பிரச்சினை ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகளுக்குத் தான் அதிகமாக ஏற்படுகிறது. குழந்தைகளின் வியர்வை நாற்றம் அதிகமாக இருந்தால் அவர்களது சிறுநீரில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மிகச் சிறிய வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும் மிகவும் தவறு. அவர்களுக்கு சிந்திக்கும் திறனே இல்லாத சமயத்தில் அவர்களை பள்ளிக்கு அனுப்பி, அவர்களது சுயபுத்தியை பணியாற்ற விடாமல் செய்து விடுகிறோம். எனவே அவசர யுகத்தில் நாம் பயணிப்பது போல நமது பிள்ளைகளும் அவசர கதியாக வளர்க்க வேண்டாம் என்பதே ஒரு வேண்டுகோளாக வைக்கப்படுகிறது.