ஹோலி பண்டிகை கொண்டாடிய 6 வயது சிறுவன் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த போது தரையில் நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பி அவனது வயற்றை துளைத்துச் சென்ற விபத்தில் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
மரணத்தின் விளிம்புக்குச் சென்று திரும்பிய அந்த சிறுவனின் பெயர் மிகிர். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவன்.
நேற்று முன்தினம் சிறுவன் மிகிரின் வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, மாடியில் ஆடிப்பாடி விளையாடிக்கொண்டு இருந்த மிகிர், எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தான்.
அவன் கீழே விழுந்த இடத்தில் நீண்ட இரும்பு கம்பி ஒன்று தரையில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது. அந்த கம்பியின் மீது மிகிர் விழுந்தான். இதனால் இரும்பு கம்பி அவனுடைய விலா பகுதியில் நுழைந்து மறுபக்கம் வந்து விட்டது.
தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட மிகிருக்கு 4 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, இரும்புக் கம்பியை அகற்றினர்.
ஆனால், இரும்புக் கம்பியால் அவனது இரைப்பையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவன் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளான்.
இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மேகராஜ் குன்டன் கூறுகையில், "சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போதே அதிகமான ரத்தம் வெளியேறி இருந்தது. உடனடியாக சிகிச்சை மேற்கொண்டதன் பலனாக மிகிர் தற்போது நன்றாக இருக்கிறான், அவனுடைய இரப்பையில் இரும்பு கம்பி குத்தியதால் ஒரு அங்குல அகலத்துக்கு துவாரம் விழுந்துள்ளது, கல்லீரலும், கணையமும் லேசாக சேதம் அடைந்துள்ளன. அவன் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளான். அடுத்த 72 மணி நேரம் அவனுக்கு மிகவும் முக்கியமான கட்டமாகும்'' என்று தெரிவித்தார்.
குழந்தைகளே விளையாடும் போது கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்படுங்கள். சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும்போதும் கவனமாக இருந்து பாதையை கடக்க வேண்டும். மாடியில் பெற்றவர்களின் கண்காணிப்பின்கீழ் மட்டுமே பிள்ளைகள் விளையாட வேண்டும். அவ்வாறில்லாமல் தனியாக பிள்ளைகள் விளையாடுவது தவிர்க்க வேண்டிய விஷயமாகும்.