குழந்தைகளா.. உங்களது பெற்றோர் தினமும் படியுங்கள் படியுங்கள் என்று புத்திமதி கூறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அது உங்களுக்குப் பிடிக்காத புத்திமதியாக இருக்கும்.
அவர்கள் உங்களை படியுங்கள் என்று கூறுவதற்கு முக்கியக் காரணம், இப்போதுதான் நீங்கள் படிப்பதற்கான நேரம். இந்த நேரத்தை வீணடித்துவிட்டால் பிறகு நீங்கள் படிக்க நினைத்தாலும் படிக்க முடியாது. இதனை உணர்ந்துதான் உங்களது பெற்றோர் உங்களுக்கு புத்திமதி கூறுகிறார்கள்.
நேரத்தை வீணாக்குவதை விரும்பாத பலர் புகழ்பெற்றவர்களாகின்றனர். புகழ்பெற்றவர்கள் பலரும் நேரத்தை பொன்னாகக் கருதியுள்ளதையும் கண்கூடாகக் காணலாம்.
இதற்கு ஒரு உதாரணமாக ஒரு விஷயத்தை இங்கு கூறுகிறோம்..
ஜார்ஜ் பெர்னாட்ஷா தாம் இறக்கும் வரையில் தாடி வைத்திருந்தார். ஒரு சமயம் செய்தியாளர் ஒருவர் பெர்னாட்ஷாவை அணுகி "எதற்காக நீங்கள் தாடி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தாடி வைத்துக்கொள்வதால் லாபம் உண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார். "சந்தேகமில்லாமல் லாபம்தான்" என்றார் பெர்னாட்ஷா. "எப்படி" என்று கேட்டார் செய்தியாளர்.அதற்கு பெர்னாட்ஷா "நான் சவரம் செய்து கொள்வதற்காகச் செலவிட்டிருக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் ஒரு நாடகமாவது எழுதி இருப்பேன் இல்லையா?" என்றார்.
நேரத்தை அவர் எப்படி மதித்துள்ளார் என்று பார்த்தீர்களா? ஆம் குழந்தைகளே.. நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். இன்று நாம் நேரத்தை கண்டுகொள்ளாவிட்டால் நாளை நேரம் நம்மை கண்டுகொள்ளாது, மற்றவர்களும் நம்மைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இதை நினைவில் கொண்டு உங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றுங்கள்.