குறைந்து வரும் கொண்டாட்டம்!
`
Little Tommy Tucker... ' என்ற யு.கே.ஜி-யில் தனது டீச்சர் மனப்பாடமாக சொல்லிக்கொடுத்த பாடலை பாடியபடியே விளையாடிக் கொண்டிருந்தான் சதீஷ்.எதிர்வீட்டு அபினவ், தீபாவளி நெருங்குவதற்கு 10 நாட்கள் முன்பாகவே அப்பா வாங்கிக் கொடுத்த துப்பாக்கியில் (சாதாரண துப்பாக்கிதான்) பொட்டு வெடியையும், ரோல் கேப் வெடியையும் வெடித்துக் கொண்டிருந்ததை பார்த்த சதீஷ் உடனே அப்பாவிடம் சென்று கேட்டான்.
`
அப்பா. அபினவ் மட்டும் இப்பவே பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறான். எனக்கும் துப்பாக்கி, பட்டாசு வாங்கிக் கொடு' என்றான்.அதற்கு அவனது அப்பா சொன்னார். டேய், `அவன் வெடிச்சா வெடிச்சுட்டுப் போகட்டும்டா. உனக்கு ஒருவாரத்திற்குள் வாங்கித் தருகிறேன்' என்று சமாதானம் சொன்னார்.அப்பா யோசித்தார். `என்ன செய்வது, வாங்கும் சம்பளம் 10 நாட்களுக்குள் காலியாகி விடுகிறது. போனஸோ தீபாவளிக்கு 2 நாட்கள் முன்புதான் கிடைக்கும். அதற்கும் இப்போதே பட்ஜெட் உள்ளது' என்று மனதிற்குள் நினைத்தபடியே உறங்கிப் போனார் சதீஷின் அப்பா.சரி, இதெல்லாம் எதற்கு?சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், தீபாவளி என்றாலே அமர்க்க்ளப்படும். புத்தாடையை எந்தக் கடையில் வாங்குவது? என்ன கலரில், லேட்டஸ்டாக என்ன வெரைட்டி ஆடைகள் கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன?
துணியாக ஒன்று எடுத்து தைக்க வேண்டும்? ரெடிமேடு டிரெஸ் ஒன்றும் வாங்கியாக வேண்டும். பட்டாசுகளை ஒரு வாரத்திற்கு முன்பே வாங்கிக் குவித்து, அந்தப் பகுதியையே அதிர வைக்க வேண்டும்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு நமது உடை, பட்டாசு இருப்பதோடு, புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களில் எதைத் தேர்ந்தெடுத்து தீபாவளி தினத்தன்று பார்ப்பது? என்ற ரீதியில் கற்பனை விரிந்தோடும்.
இது ஒருபுறமிருக்க வீட்டில் அம்மாக்கள், பாட்டிகள், அத்தைகள் என அவரவர் நிலைக்கேற்ப 10 நாட்களுக்கு முன்பே பண்டங்கள், பதார்த்தங்களை தயாரிக்கத் தொடங்கி விடுவார்கள்.மாவு மில்லில் அரிசி அரைப்பது முதல் கடைகளில் வாங்கி காய வைத்து பதமாக வேகவைக்கும் முறுக்கு, அதிரசம், வசதி இருப்பின் சமையல்காரர்களை அழைத்து சுவீட், காரம் செய்தல் போன்ற பணிகள் ஜரூராக நடைபெறும்.ஆஹா, கேட்பதற்கு என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் இன்றைய கால கட்டத்தில், அக்கம்பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத, அதிவேக ஐ.டி. யுகத்தில் விலைவாசியும் அதிவேகமாக ஏறிச் சென்றுள்ளது. இதுபோன்ற நிலையில் மேற்குறிப்பிட்ட விஷயங்கள் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு சாத்தியமா? நிச்சயமாக இல்லை என்பதே 90 விழுக்காட்டினரின் பதில்.கொண்டாட்டங்களும், அவற்றின் உத்வேகங்களும் குறைந்து கொண்டே வருவதை யாராலும் மறுக்க முடியாது.நாம் சிறு வயதில் அனுபவித்த கொண்டாட்டங்கள் இப்போது இல்லை. குழந்தைகளுக்கு நம்மால் உரிய கொண்டாட்டத்தை கொடுக்க முடியாத நிலைக்கு பல காரணங்கள் உண்டு.நாள்தோறும் அதிகரிக்கும் மளிகை உள்ளிட்ட பொருட்களின் விலை, கணவன்- மனைவி இருவரும் பணிக்குச் செல்வதால், பணம் இருந்தும் உரிய கொண்டாட்ட மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத நிலை, மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு காரணமாக பட்டாசுகளின் விலை உயர்வு, நூல் விலை உயர்வு, மின்பற்றாக்குறையால் நெசவாளர்கள் உரிய அளவு இலக்கினை எட்ட முடியாததால் ஜவுளி உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால் அவற்றின் விலை உயர்வு என எண்ணற்ற காரணங்களைக் கூற முடியும்.
என்றாலும், உரிய முறையில் கிடைக்கும் வசதிகளைக் கொண்டு, எந்த அளவு முடியுமோ, அந்த அளவுக்கு பண்டிகைக்குத் தேவையானவற்றை குழந்தைகளுக்கும், நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கும் வாங்கிக் கொடுத்து கொண்டாட்டத்தை சிறப்பிப்போம்.
கொண்டாட்டம் குறைந்து வந்தாலும், அவற்றை நிறைவு பெற்றதாக்க நாம் முயற்சிப்போம். வருங்கால சந்ததியினருக்கு கொண்டாட்டத்தின் மகத்துவத்தை உணர்த்துவோம் என்பதே இதன்மூலம் நாம் கூறும் செய்தி.