தங்களது ஆசிரியர் ஓய்வு பெற்று, வறுமையில் வாடுவதைக் கண்ட முன்னாள் மாணவர்கள் இணைந்து நிதி அளித்து தங்களது ஆசிரியருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த இல்லத்திற்கு குரு நிவாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வீட்டின் குடிபுகு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
நாம் படித்த ஆசிரியர் எதிரே வந்தாலும், பார்க்காதது போல போய்விடும் மாணவர்கள் நிறைந்த இந்த காலத்தில், ஆசிரியர் தினமான இன்று, ஆசிரியருக்கு நன்றிக்கடன் செலுத்திய மாணவர்களின் இந்தச் செயலை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைபள்ளியில் 31 ஆண்டுகள் தமிழாசிரியராக பணியாற்றியவர் புலவர் வெங்கட்டராமன்.
1954-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை இந்த பள்ளியில் அவர் பணி புரிந்தார். 1987-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை ராசிபுரத்தில் உள்ள வாசவி மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.
புலவர் வெங்கட்டராமன் எளிய நடையில் தமிழை கற்றுக் கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார். அதுவும் திருக்குறளுக்கு விளக்கம் அளிப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவராக இருந்தார். அனைவரிடமும் அன்புடன் பழகி வந்தார். ஆசிரியர் பணியோடு, அந்த ஊரின் முன்னேற்றத்திலும், ஆன்மிகத்திலும் அளவில்லாத ஈடுபாடு காட்டினார்.
எத்தனையோ சிறப்பான பணிகளை ஆற்றிய வெங்கட்டராமன், ஓய்வு பெற்ற பிறகு அவரை ஏழ்மை வாட்டியது. வாடகை வீட்டில் குடியிருந்த ஆசிரியரின் நிலையைக் கண்டு, அவரிடம் படித்து பெரிய செல்வந்தர்களாக வாழும் மாணவர்கள் வாடினார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியருக்கு குடியிருக்க வீடு ஒன்றுக் கட்டிக் கொடுக்க முன்னாள் மாணவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, அவரிடம் படித்து உயர் பதவிகளிலும், தொழிலதிபர்களாகவும் இருக்கும் மாணவர்கள் முன்வந்து அளித்த நிதியினால் தற்போது குரு நிவாஸ் என்ற ரூ.பத்து லட்சம் மதிப்பிலான வீடு குருசாமிப்பாளையம் அருகே உள்ள வண்டிப்பேட்டையில் உருவாகியுள்ளது.
அந்த வீட்டின் குடிபுகு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களை புலவர் வெங்கட்டராமன் அட்சதை தூவி வாழ்த்தினார். மேலும் முன்னாள் மாணவர்கள் பலர் பல வருடங்களுக்கு பிறகு ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டு கடந்த கால நிகழ்வுகளையும், தற்போதைய நிலைகளையும் பரிமாரிக் கொண்டனர்.
விழாவில் முன்னாள் மாணவரும் உத்தரபிரதேசத்தின் முன்னாள் காவல்துறை டி.ஜி.பி.யுமான பழனிவேல், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் தனசேகரன், கவிஞர் சுப்பிரமணியம் உள்பட நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கிரக பிரவேசம் குறித்து புலவர் வெங்கட்டராமனிடம் கேட்ட போது, சிறிய அளவில் செய்வதாக கூறினார்கள், இந்த அளவுக்கு பெரிய அளவில் செய்திருப்பதை கண்டு நெஞ்சம் மகிழ்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். வெங்கட்டராமனுக்கு பொன்னம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.