போக்குவரத்தால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசிலிருந்தும், சத்தத்திலிருந்தும் கருவுற்றபெண்கள் தற்காத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாத பெண்ணின் கருப்பையில் வளரும் குழந்தைக்கு உடல்நலம் வாழ்வின் பிற்காலங்களில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் கருவுற்ற பெண்களை விட, போக்குவரத்து மாசுபாடற்ற சுத்தமான காற்று உள்ள பகுதிகளில் வசிக்கும் கருவுற்ற பெண்களின் கரு உள்ள நிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சுத்தமான காற்று உள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களின் வயிற்றில் வளரும் கரு சற்று பெரிய அளவில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காற்று மாசுபாடு சின்ன குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பதை நாங்கள் உணர்ந்துள்ள நிலையில், தற்போது காற்று மாசு தாயின் கருப்பையில் வளரும் கருவை பாதிக்கும் என்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர். குறிப்பாக கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளில் அதாவது, மூளை உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகள் வளரும் போதே இவற்றினால் பாதிப்பு உருவாவதாகவும் ஆராய்ச்சிக் குழுத் தலைவர் மருத்துவர் ஆடிரியான் பெர்னார்ட் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவுகள் தான் முதல் முறையாக பிறப்புக்கு முன்னதாக குழந்தைகளை காற்று மாசு தாக்கும் என்பதை வெளிப்படுத்தியது என்றும், கரு வளர்ச்சியின் முக்கிய காலத்தில் மாசுவின் தாக்கம் குறித்து இந்த முக்கிய முடிவுகள் மிகவும் பயன்பாட்டைத் தரும் என்றும் பெர்னார்ட் கூறியுள்ளார். எடை அதிகமாக பிறக்கும் குழந்தைகள் குழந்தைப் பருவம், இளமைப் பருவத்தில் ஆரோக்கியம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று கூறியுள்ள பெர்னார்ட், கருவுற்ற காலத்தில் கருவின் அளவு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்கால வாழ்க்கையில் நல்ல உடல் நலத்துடன் இருக்க குழந்தை பிறக்கும் போது உள்ள எடை இன்றியமையாதது. நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும் கொழு கொழு குழந்தைகள் நல்ல அறிவுத்திறனைப் பெற்று குழந்தைப் பருவத்திலும், இருதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்காதவண்ணம் இளமைப் பருவத்தில் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருவுற்ற 13 முதல் 26 வாரத்திற்க்கு இடைப்பட்ட காலத்தில் தான் கருவின் வளர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிகமான மாசுவை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள பெண்களின் வயிற்றில் வளரும் கரு சராசரியானதாகவும், தலை, வயிற்றுப் பகுதிகள், கருவின் நீளமும் குறைந்து காணப்படுவதாகவும் ஆடிரியான் பெர்னார்ட் கூறியுள்ளார்.