குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் அப்பாக்களுக்கு இனி கவலையில்லை. உங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு உடனுக்குடன் நீங்கள் பதில் சொல்வதற்காகவே புத்தகம் ஒன்று வந்துள்ளது.
வீட்டில் இருக்கும் போது குழந்தைகள் நம்மிடம் வந்து அப்பா, உன்னுடைய தலையில் எத்தனை முடி உள்ளது என்றோ, எதற்கு நமக்கு புருவங்கள் தேவை என்றோ, வானம் ஏன் நீலநிறமாக இருக்கின்றது என்பது போன்றோ கேள்விகளைக் கேட்கும் போது எவ்வளவு படித்த அப்பாக்களும் சற்று தடுமாறித்தான் போகின்றனர்.
இப்படித்தான் லண்டனைச் சேர்ந்த வென்டெல் ஜெமிசென்னுடைய இளைய மகன் கேட்ட வினாக்களுக்கு விடை சொல்லத் தெரியாமல் நம்ம ஊர் அப்பாக்களைப் போல முழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனைக்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்பதில் வென்டெல் ஜெமிசென் களம் இறங்கினார்.
அதன் விளைவுதான் அப்பாக்களுக்குத் தெரிஞ்சது கொஞ்சம் - என்ற புத்தகம். இதற்காக அவர் உயிரினங்கள் தோற்றம், மருத்துவம், பழங்கால வரலாறு தொடங்கி வானிலைத் தொடர்பான அடிப்படையான கேள்விகளுக்குத் சம்மந்தப்பட்ட துறை வல்லுநர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று அதனை ஒர் புத்தகமாக தொகுத்துள்ளார்.
பொதுவாக குழந்தைகள் கேட்கும் இரண்டு கேள்விகளான எனது தலையில் எத்தனை முடி உள்ளது என்பதும், வானம் ஏன் நீலநிறமாக உள்ளது என்பதும் தான். குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தலையில் ஒரு லட்சம் முடிகள் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேநேரத்தில் சிவப்பு நிற தலைக்கொண்டவர்கள் தலையில் உள்ள முடி சற்று கனமாக இருப்பதால் எண்ணிக்கைக் சற்று குறைவாக இருக்கும் என்றும் அதில் கூறியுள்ளனர்.
வளிமண்டலத்தில் உள்ள காற்றின் மூலக்கூறுகள் தான் வானம் நீலமாக தோன்றக் காரணமாகும். அதிக அதிர்வெண் கொண்ட அலைகள் காற்று மூலக்கூறுகள் வழியாக பயணிக்கின்றன. குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகள் காற்று மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகின்றன. எனவே எப்போதெல்லாம் காற்று மூலக்கூறுகளை நீல நிற குறு அலைவரிசைகள் தொடுகின்றனவோ அப்போதெல்லாம் அவை வான்வெளி முழுவதும் சிதறடிக்கப்படுகின்றன. எனவே தான் வானம் எப்போதும் நீலநிறமாக காணப்படுகிறது.
குளிக்கும் போது நம்முடைய உள்ளங்கை, பாதம் ஆகிய பகுதிகளில் ஏன் ஒருவிதமான சுருக்கம் ஏற்படுகிறது என்பது மற்றொரு கேள்வி, குளிக்கும் போது நம் உடலில் உள்ள மேல்தோல், தோலினுள் நீர் உட்புகாமல் இருப்பதற்காக எண்ணெய் போன்ற வழவழப்பான செபும் என்ற திரவத்தை உமிழ்கிறது. இது சிறிது நேரம் வரையிலும் தோலில் நீர் உட்புகாதவாறு பார்த்துக் கொள்கிறது. நீண்டநேரம் தண்ணீரில் இருக்கும் நிலையில் செபும் கரைந்து நீர் தோலுக்குள் உட்புகத் தொடங்குகிறது. இதனால் வெளிப்புறத்தோல் விரிவடையத் தொடங்கும். அப்போது அதன் கீழ் பகுதியில் உள்ள திசுக்கள், மேற்புறத் தோலின் விரிவுக்கு தகுந்தவாறு சுருங்குவதால் அவ்வாறு ஏற்படுகிறது.
வாகனங்களை நிறுத்த ஏன் சிவப்பு நிற விளக்குகளை பயன்படுத்துகின்றார்கள் என்று கேட்டால் இனி தாராளமாக நீங்கள் இவ்வாறு பதில் சொல்லலாம், 19 -நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்காட்டிஸ் பொறியியல் வல்லுநர் ராபர்ட் ஸ்டிவன்சன் அப்போது கலங்கரை விளக்கம் அமைக்க வெண்மை நிறத்துக்கு பதிலாக வேறு ஒருநிறத்தை தேர்வு செய்வதில் ஈடுபட்டிருந்தார்.
அந்த காலத்தில் சிவப்பு நிறக் கண்ணாடிகள் தான் இருந்துள்ளது. மேலும் எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தாலும் சிவப்பு நிறத்தைக் காணமுடியும் என்று கூறியுள்ளனர். அதிலிருந்து கடல் போக்குவரத்தில் சிக்னலாக பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிறம், தொடர்ந்து இரயில்கள், சாலைப் போக்குவரத்தில் வாகனங்களை நிறுத்தவும் பயன்படத் தொடங்கியது.
நமக்கு ஏன் புருவங்கள் உள்ளன என்பது தான் அடுத்த கேள்வி. இதற்கு, சமூகமாக வாழும் மனிதன், மற்றொரு மனிதனின் உணர்வுகளை அவனுடைய முகத்தின் மூலம் எளிதில் தெரிந்து கொள்கிறான். முகவெளிப்பாடுகளை ஒருங்கிணைக்கும் முக்கியமான பணியைத் தான் புருவங்கள் மேற்கொள்கின்றன என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற, குழந்தைகள் நம்மிடம் கேட்கும் ஏராளமான, நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் ஆயிரமாயிரம் விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கான விடைகளைத் தொகுத்து வந்துள்ள புத்தகம் தான் அப்பாக்களுக்கு தெரிஞ்சது கொஞ்சம். கேள்வி கேட்கும் குழந்தைகளைத் திட்டாமல், பதில் சொல்லத் தயாராவதே அப்பாக்களின் புத்திசாலித்தனமாகும் என்கிறார் அந்த புத்தகத்தின் ஆசிரியரான வென்டெல் ஜெமிசென்.