குழந்தைகள் பிறந்து முதல் ஒரு மாதம் வரை மிகவும் சிரமப்படுவார்கள். புதுச் சூழல், கால நேரம் அனைத்தும் பழகியதும் சரியாகிவிடுவார்கள்.
பொதுவாக குழந்தைகளின் வாழ்வில் மிகவும் இனிமையான காலம் என்றால் அது முதல் 3 வயது வரைதான். முன்பெல்லாம் இது 5 ஆண்டுகளாக இருந்தது. ஆனால் தற்போது குழந்தைகளை 3 வயதிலேயே, ஏன் அதற்கும் முன்பாகவே நாம் பள்ளிக்கு அனுப்பி விடுவதால், அவர்களது இனிமையான காலம் 3 ஆண்டுகளாக சுருங்கிவிட்டது.இந்த காலம்தான் அவர்களுக்கு நேரம், காலம் என்று எதையும் பற்றி சிந்திக்காமல், பசிக்கும் போது சாப்பிட்டு, தூக்கம் வரும்போது தூங்கி, நினைக்கும் போதெல்லாம் விளையாடி மகிழும் காலமாக இருக்கிறது.வாழ்க்கையில் முக்கியமான பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் காலமாகவும் இது அமையும். பல புதிய விஷயங்களைப் பார்ப்பதும், கேட்பதும் அவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.கடல், பூங்கா, பூக்கள், பறவைகள் என பலவும் அவர்களை வெகுவாக ஈர்க்கும்.அதில்லாமல், பெற்றவர்களின் அன்பை முழுமையாகப் பெறும் காலமும் அதுதான். தனது சகோதர சகோதரிகளிடம் இருந்தும், பாட்டி, தாத்தாவிடம் இருந்தும் கிடைக்கும் அன்பு மழையில் நனையும் காலமும் இதுதான்.இதுவல்லாமல், அவர்களது வருங்காலத்தையும், அவர்களது குண நலனையும் நிர்ணயிக்கும் காலமாகவும் இது அமைகிறது.எனவே, பெற்றோர்கள் இந்த காலக்கட்டத்தில் அவர்களை ஒழுக்கமாகப் பேசவும், பழகவும், பள்ளிக்குச் செல்லும் வகையில் தயார் படுத்துவதும் அவசியம்.மற்றவர்களுடன் எப்படி பழகுவது, எச்சரிக்கை உணர்வு, பொறுப்புணர்வு, நமது பண்பாடு என அனைத்தையும் முழுமையாக அவர்களுக்கு அளிக்க வேண்டியது அவசியமாகிறது.