மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில், தனது பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை, தனது பிறந்த நாளன்று அனாதையான விவரம் தெரிய வந்துள்ளது.
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நாரிமன் ஹவுஸில் பலியான யூத தம்பதியின் 2 வயது குழந்தை, உயிருடன் மீட்கப்பட்டது.
நாரிமன் ஹவுஸ் கட்டிடத்தில் யூத மதத்தை சேர்ந்த பல குடும்பங்கள் தங்கி இருந்தன. மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்களில் நாரிமன் ஹவுசும் ஒன்று.
நாரிமன் ஹவுஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் அமெரிக்க குடியுரிமை பெற்ற ரப்பி என்ற யூதர் தனது மனைவியுடன் பலியானார். அவர்களுடைய 2 வயது மகன் மோஷி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். இதில் வேதனை என்னவென்றால் ரப்பியும், அவருடைய மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட தினமான நவம்பர் 28-ந் தேதிதான் மோஷியின் பிறந்த நாள் ஆகும்.
மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான பிரார்த்தனைக் கூட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்த மோஷி, தனது தாய் தந்தையைக் காணாமல் பெரும்பாலும் அழுத வண்ணம் இருந்தது. எல்லோரையும் மிரள மிரள பார்த்தது.
குழந்தை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பியது பற்றி அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் சாண்ட்ரா சாமுவேல் கூறுகையில், குழந்தை மோஷி, 2-வது மாடியில் இருந்து இருக்கிறான். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்புவதற்காக ஒரு அறையின் கதவை பூட்டிக்கொண்டு நான் உள்ளே மறைந்து இருந்தேன். மோஷி, இடைவிடாமல் எனது பெயரைக்கூறி அழைத்துக் கொண்டு இருந்த சத்தம் எனது காதில் விழுந்ததும் கதவை திறந்து கொண்டு 2-வது மாடிக்கு விரைந்து சென்று அவனை தூக்கிக்கொண்டு ஓடிவந்தேன். அப்போது உள்ளே புகுந்த கமாண்டோ படை வீரர்கள் எங்களை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர் என்றாள்.
மோஷியின் பெற்றோர் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு விரைந்து வந்த ரப்பியின் மனைவியின் பெற்றோரிடம் மோஷி ஒப்படைக்கப்பட்டான்.
குழந்தை மோஷியின் பெற்றோர் இல்லாததால், பணிப்பெண் சாண்ட்ராவை மட்டுமே அந்த குழந்தைக்கு அடையாளம் தெரிகிறது. அதனால், இந்தியாவை சேர்ந்த சாண்ட்ராவுக்கு இஸ்ரேல் நாட்டு குடியுரிமை அளித்து அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.