நம் கைகளை நீட்டினாலேப் போதும், குழாயில் இருந்து நீர் வெளிவரும். கைகளைக் கழுவிக் கொண்ட பிறகு கைகளை எடுத்த பிறகு தானாகவே தண்ணீர் வருவது நின்றுப் போகும். இப்படி தானியங்கி தண்ணீர் குழாய்களை சமீபத்தில் நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.
இவை எப்படி செயல்படுகின்றன என்று நாம் வியந்திருப்போம். எல்லாமே தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான் என்று நமக்கு நாமே எளிதான பதிலையும் சொல்லிக் கொண்டிருப்போம்.
ஆனால் இந்த கேள்விக்கு உரிய பதிலை சொல்ல வேண்டியது எங்களது கடமையாகிறது. குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தில் சந்தேகம் எழுந்தால் உடனடியாக அதைப் பற்றி படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்வது அவசியம்.
முதலில் தானியங்கி தண்ணீர் குழாய்கள் உருவாகக் காரணமான விஷயம் என்னவென்றால், நீர் வீணாவதைத் தடுக்க என்பதுதான். பொது இடங்களில், மூடப்படாமல் தண்ணீர் போய்க் கொண்டிருக்கும் குழாய்களை நாம் பார்த்திருப்போம். பலர் மறதியின் காரணமாகவோ, அலட்சியத்தினாலோ, கை கழுவிய பிறகு குழாயை மூடுவதால், கை மீண்டும் அசுத்தமடைகிறது என்று நினைப்பதாலோ தண்ணீர் குழாயை அப்படியே விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் கிடைத்தற்கரிய தண்ணீர் வீணாகிறது.
எனவேதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாகத் தானியங்கி தண்ணீர்க் குழாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தானியங்கிக் குழாயில் ஒரு மின்காந்த அமைப்பு அடிப்படையாக அமைந்துள்ளது. வாஷ் பேசின் அருகே கையைக் கொண்டு செல்வதைக் கண்டுபிடிப்பதற்காக ஓர் ஒளி மூலமும், அதற்கு எதிராக ஒளியை உணரும் ஒரு பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. அதைப் போன்ற ஒளி உணர் அமைப்புகள்தான் தானியங்கி எச்சரிக்கை அலாரங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
தானியங்கிக் குழாய் வாஷ் பேசினில் எதிரெதிராக ஒளி மூலமும், ஒளி உணர் அமைப்பும் அமைக்கப்பட்டுள்ளன. கையை நீட்டுவதால் ஒளி தடைப்படும்போது, அந்தச் சுற்றிலிருந்து, தண்ணீரை விடுவிப்பதற்கான சமிக்ஞை மின்காந்த அமைப்புக்குச் செல்கிறது. கையை எடுக்கும்போது ஒளி மூலத்துக்கும், ஒளி உணர் அமைப்புக்கும் தொடர்பு ஏற்படுவதன் மூலம் மின்காந்த அமைப்பின் மூலம் தண்ணீர் வெளிவருவது தடுக்கப்படுகிறது.
இந்தத் தானியங்கிக் குழாயில் கைகள் சுதந்திரமாக இருக்கின்றன, தொடவேண்டிய தேவையில்லை, கையை எடுத்தவுடன் ஒளி மூலத்துக்கும் ஒளி உணர் அமைப்புக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு தண்ணீர் தானாக நிறுத்தப்படுகிறது என்பதால் இது மிகவும் பிரபலமாகி விட்டது. பொது இடங்களில் மட்டுமின்றி, குழந்தைகள், பெரியவர்கள், உடல் ஊனமுற்றோர் உள்ள வீடுகளிலும் இந்த வகைக் குழாய்கள் தற்போது அதிகமாகப் பொருத்தப்படுகின்றன.