Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தந்தையரைப் போற்ற ஒரு நாள்!

ச.ர.ராஜசேக‌ர்

தந்தையரைப் போற்ற ஒரு நாள்!
, ஞாயிறு, 15 ஜூன் 2008 (12:56 IST)
உலகெங்கிலும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஒரே தினத்தில் அல்ல. இந்தியா உள்ளிட்ட 46 நாடுகளில் ஜூன் 15ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் வேறு சில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

அன்னையர் தினத்தைப் போன்றே தனிச் சிறப்பைப் பெற்றுள்ள தந்தையர் தினம், கடந்த 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் அறிமுகம் ஆனது. ஆனால் பல்வேறு நாடுகள் இதனை தந்தையர் தினம் என்ற பெயரில் கொண்டாடாமல், 'ஆண்கள் தினம்', 'பெற்றோர் தினம்' என்று கடைபிடிக்கின்றனர்.

தந்தையைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்த தினத்தில், அவர்களது குழந்தைகள் தங்கள் தந்தைக்கு சிறப்புப் பரிசளித்து கவுரவிப்பது வழக்கம். இந்நாள் தந்தைகளுக்கு ஊக்கத்தையும், தமது குடும்பம், குழந்தைகளை மேம்படுத்தி அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் ஏற்படுத்துகிறது என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கும் பொறுப்பு தந்தைக்கும்- அன்னைக்கும் சமமானதே என்றாலும், குழந்தைக்கு அன்னையிடம் இருக்கும் பாசப்பிணைப்பின் அளவு/தாக்கம் தந்தையிடம் இருக்குமா என்பது நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்...

webdunia photoWD
இந்தியாவைப் பொறுத்த வரை கணவன்-மனைவி பந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் அதே நேரத்தில், குழந்தைகளை வளர்ப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக பொறுப்புகளை ஏற்றுக் கொள்கின்றனர் என்ற கூற்றும் நிலவுகிறது. இதற்கு உதாரணமாக "நூலைப் போல் சேலை... தாயைப் போல் பிள்ளை" என்பது போன்ற பல பழமொழிகளைக் கூறலாம்.

ஆனால் தற்போதைய நவீன யுகத்தில், பெண்களும் ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்க துவங்கி விட்டதால், தம்பதிகளிடையே பிரச்சனை ஏற்படும் போது, பழங்காலத்துப் பெண்கள் போல் "கல்லானாலும் கணவன்... புல்லானாலும் புருஷன்..." என்ற எண்ணத்துடன் வீட்டிற்குள் முடங்காமல், தங்கள் சொந்தக் காலில் நின்று தத்தமது குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகின்றனர்.

இது தந்தையர் தினத்தின் மகிமையை எதிர்கால சந்ததிகளிடம் குறைத்து விடும் என்று கூறப்படும் அதேவேளையில், மனைவியை இழந்து/பிரிந்து வாழ்ந்தாலும் தனது குழந்தைக்காக மறுமணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களை சமூகம் மதிக்கும் மனிதர்களாக மாற்றும் பல தந்தைகள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்துக்கு தலைவனாக அல்லது தந்தையாக இருந்த சிலர், சமூகத்திற்கும் பெரியளவில் தொண்டாற்றியும் உள்ளனர். அந்த வரிசையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி,

தந்தை பெரியார், நெல்சன் மண்டேலா போன்றோர், 'தந்தை' என்ற சொல்லுக்கு மேலும் சிறப்பு ஏற்படுத்தியுள்ளனர் என்றே கூற வேண்டும்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டத்தில் குழந்தைகள் பாடும் பாடல்களை, அவர்களுடையை பேச்சை அவர்கள் தந்தைகள் மிகவும் ரசித்தனர். இன்றைக்கு அதே குழந்தைகள் இளைஞர்களாகவும், தந்தைகளாகவும் மாறிவிட்டனர். அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டன.

ஆனால் இன்றைய நவீன உலகில் செல்போன், லேப்-டாப் கணினி, ஐ-பாட் கருவிகளும் தான் பல தந்தைகளுக்கு கைக்குழந்தைகளாக மாறி விட்டன. தந்தையின் பணிச்சுமை காரணமாகவும், குழந்தைகளின் பாடச்சுமை காரணமாகவும் தந்தை -மகன்/மகள் இடையிலான பாசப் பிணைப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

பல வீடுகளில் அக்குடும்பத்தின் வாரிசுகள் பள்ளிக்குச் செல்லும் போது, கால்சென்டர் அல்லது சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் அவரது தந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்... அதே தந்தை நள்ளிரவு அல்லது அதிகாலை பணி முடிந்து வீடு திரும்பும் போது அவரின் குழந்தைகள் நித்திரையில் இருக்கும்.

நாளடைவில் தந்தை-மகன் இடையிலான பாசக்கயிறு மிக மெலிதாகி விடும். இதன் காரணமாகவே இன்று முதியோர் இல்லங்கள் அதிகரிக்கின்றன என்றும் ஒரு சில மனநல மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, தந்தையர் தினத்தை கொண்டாடும் இந்நாளில், அனைத்து தந்தையரும் தங்கள் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை, அளிக்கப்பட வேண்டிய பாசத்தை மனதார உணர வேண்டும். வேலைப்பளு இருந்தாலும் குழந்தைகளுக்காக ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியம்.

உதாரணமாக, குழந்தை மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும், அலுவலத்தில் உள்ள தந்தை, போன் மூலம் தொடர்பு கொண்டு பள்ளியில் நடந்த சுவையான நிகழ்வுகளை கே‌ட்டு‌ததெ‌ரி‌ந்தகொள்ளலாம். அவர்கள் கல்லூரி செல்லும் மாணவர்களாக இருந்தால், மாலை நேரத்தில் கல்லூரி முடிந்தவுடன் தங்கள் அலுவலகம் அருகே உள்ள ஏதாவது ஒரு உணவு விடுதிக்கு அழைத்து ஒன்றாக தேனீர் பருகலாம். இதுபோன்ற செயல்கள் மூலம் தந்தை மீதான பாசம் கலந்த மரியாதை வாரிசுகளுக்கு நிச்சயம் அதிகரிக்கும்.

மேற்கண்டவற்றை இன்றைய தந்தைகளுக்கு கூறப்படும் யோசனையாக கருத வேண்டாம், நாளைய தந்தைகளாக உருவெடுக்க இருக்கும் இன்றைய இளைஞர்களும் எதிர்காலத்தில் இவற்றைப் பயன்படுத்தினால், பல நூற்றாண்டுகள் கடந்தாலும் தந்தையர் தினக் கொண்டாட்டம் கோலாகலமாக தொடரும்.

Share this Story:

Follow Webdunia tamil