இந்தியாவிலுள்ள கடலோர சுற்றுலாத் தளங்களில் கன்னியாகுமரிக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. காரணம், வங்களா விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடல்களும் சங்கமிக்கும் இடமாக கன்னியாகுமரி உள்ளது.
இப்பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் பார்வதி தேவி தன்னுடைய அவதாரங்களில் ஒன்றான குமரி பகவதி என்னும் பெயருடன் சிவனை அடையும் பொருட்டு தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டது. அவருடைய நினைவாக காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் அங்குள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை படகில் சென்று காணத் தவறுவதில்லை.
கன்னியாகுமரிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுதான் விவேகானந்தர் மண்டபம்.