பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஒட்டுமொத்த இந்தியாவும் கவலையையும் சாக்ஷி போக்கிவிட்டார் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் மல்யுத்தப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்!
கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு கவுரவமான எண்ணிக்கையில் பதக்கங்கள் கிடைத்தன. இம்முறை இன்னும் கூடுதலாக பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றங்களே பரிசாகக் கிடைத்தன.
இதனால் பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மல்யுத்தப் போட்டியில் முழுத் திறனையும் வெளிப்படுத்தி பதக்கம் வென்றுள்ளார் ஹரியானாவின் சாக்ஷி மாலிக். இதன் மூலம் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் மிகப்பெரிய பெருமை சேர்த்திருக்கிறார் அவர்..
சாக்ஷி பதக்கம் வென்றிருப்பதன் மூலம், இனிவரும் போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மீதான அழுத்தம் விலகும். அதன்பயனாக அடுத்த சில நாட்களில் மேலும் சில பதக்கங்களை குவிக்க இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.