Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள் பற்றி கூறும் ஜக்கி வாசுதேவ்

வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள் பற்றி கூறும் ஜக்கி வாசுதேவ்
ஒரு ஜென் துறவியின் குடிலுக்குள் புகுந்துவிட்ட திருடனைச் சீடர்கள் பிடித்து இழுத்து வந்தனர். திருடுவதற்கு தங்கமோ, வெள்ளியோ, பணமோ எதுவும் கிடைக்காமல், ஏற்கெனவே அவன் வெறுப்பில் இருந்தான்.

 
''திருட வந்து வெறுங் கையுடன் போகாதே. இந்தா...'' என்று துறவி தன் அங்கியைக் கழற்றிக் கொடுத்தார். அவன் அதைப்  பறித்துக்கொண்டு ஓடினான். தாங்கள் பிடித்து வந்தவனை துறவி தப்பிக்க விட்டுவிட்டாரே என்று சீடர்கள் வெகுண்டு பார்த்தனர்.
 
துறவி வானத்தை அண்ணாந்து பார்த்தார். ''ஐயோ பாவம்! அந்த நிலவை மட்டும் என்னால் அவனுக்கு வழங்க முடிந்திருந்தால்,  எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!'' என்றார்.
 
சத்குருவின் விளக்கம்:
 
வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள் எப்போதுமே மனிதனுக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கின்றன. ஆனால்,  அவற்றைவிட அவனுக்கு சிறு சிறு விஷயங்களிலேயே ஆர்வம் எழுகிறது.
 
அடுத்தவரை, உலகத்தை, ஏன் பிரபஞ்சத்தையே உங்களில் ஒரு பகுதியாக உணர முடியும். மனிதனுக்கு மட்டும்தான் இந்த உணர்வு வரமாகக் கிடைத்திருக்கிறது. இதை விழிப்புணர்வுடன் அனுபவிக்கத் தவறிவிட்டு, களவாடுவதில் கவனம் வைக்கிறோம். மனிதர்களிடம் இருந்து மட்டுமல்ல, இந்தப் பூமியில் இருந்தும் களவாடிக்கொண்டுதான் இருக்கிறோம். யார் அதிகமாகக் களவாடுகிறாரோ, அவரை வெற்றிகொண்டவராக அறிவித்து மகிழ்கிறோம்.
 
பிரபஞ்சத்தையே உங்களுடையதாக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் தங்கம், வைரம் என்றெல்லாம் பெயர் வைத்து, சிறு கற்களைச் சேகரிப்பதிலும், சிறு உலோகங்களைக் கைப்பற்றுவதிலுமே உங்கள் கவனம் போகிறது. எல்லை அற்றதையே உங்களுடையதாக்கிக்கொள்வதை விடுத்து, நிலப் பகுதியின் சிறு சதுரங்களைக் கையகப்படு¢த்திக்கொள்வதில்  சந்தோஷப்படுகிறீர்கள்.
 
இந்தப் பூமிக்கு வந்திருப்பது முழுமையாக வாழ்வதற்காக. வாழ்க்கையின் ஆழத்தையும் அர்த்தத்தையும் அனுபவித்து உணர்வதற்காக. இப்படி அற்பமான அம்சங்களில் ஆர்வத்தையும் கவனத்தையும் சிக்கவைத்துவிட்டு, அற்புதங்களையும் மகத்தான விஷயங்களையும் தவறவிடுகிறோம்.
 
வாழ்க்கையை எந்த அளவு தீவிரத்துடன் நீங்கள் அணுகுகிறீர்கள் என்பதுதான் அதை மேன்மைமிக்கதாக, மகத்துவம்மிக்கதாக  ஆக்க முடியும். இதைச் சீடர்களுக்கு அடையாளம் காட்டுவதுபோல் நிலவே இருக்க, சிறு பொருட்களில் திருடன்  சந்தோஷப்பட்டதை ஜென் துறவி சுட்டிக்காட்டுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவராத்திரியில் கொலு வைத்து வழிபாடு செய்வது ஏன் தெரியுமா?