சென்னை நகரின் மிக முக்கியப் பகுதியான பாரிமுனையில் உள்ள தம்புசெட்டித் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில்.
இந்த கோயில் ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயில் என்று பலராலும் அறியப்படும்.
ஸ்ரீகாளிகாம்பாளை, கர்பக்கிரகத்தின் முன்பு அமர்ந்து நிதானமாக வழிபடும் முறை இங்கு உள்ளது. அதாவது வரிசையில் வரும் பக்தர்களை ஒரு சிறு சிறு குழுவாக பிரித்து கர்பக்கிரகத்தின் முன்பு அமரவைத்து வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த முறை அங்கு வரும் பக்தர்களுக்கு விரும்பத் தக்கதாக இருக்கிறது.
மாதந்தோறும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், பவுர்ணமி நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
நெய் விளக்கு ஏற்றுவது, எலுமிச்சை மாலை அணிவிப்பது போன்றவற்றை பக்தர்கள் செய்கின்றனர்.
கோயில் வரலாறு
சென்னைக் கோட்டையில் கி.பி.1640லேயே இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில்தான் இந்த கோயில் தம்புசெட்டித் தெருவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புராணங்களில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள மூலவச் சிலைக்கு அந்த காலத்தில் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும், நெய்தல் நில காமாட்சி என்ற பெயரும் காளிகாம்பாளுக்கு உண்டு.
காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீகாளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும் என்பது நினைவில் கொள்ளத் தக்கது. அதனை நினைவூட்டும் வகையில் தான் மேற்கு நோக்கி அர்த்தபத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீகாளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது.
மூல கர்ப்பக்கிரகம்மூல கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீகாளிகாம்பாளின் திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்ப மலரும் காட்சியளிக்கிறது. இடது கை வரதமுத்திரையுடன் காணப்படுகிறது. வலது காலை தாமரையில் வைத்தபடி அன்னை காட்சி தருகிறார்.
இந்த கருவறையைச் சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், நவக்கிரகங் கள், வள்ளி தெய்வயானையுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீமுருகர், ஸ்ரீவீரபஹாமங்கர் மற்றும் அவரது சீடர் சித்தையா, அன்னையின் பள்ளியறை, ஸ்ரீகமடேஸ்வரர் சந்நிதி, ஸ்ரீதுர்கா, ஸ்ரீசண்டிகேஸ்வரர், பிரம்மா, சூரிய சந்திரர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
வெளிப்பிரகாரத்தை சுற்றி ஸ்ரீ சித்தி விநாயகர், கொடி மரம், வள்ளி, தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ வட கதிர்காம முருகன், ஸ்ரீசித்திபுத்தி விநாயகர், ஸ்ரீவீரபத்திர மகாகாளி, ஸ்ரீநாகேந்திரர், ஸ்ரீவிஸ்வபிரம்மா, ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமகாமேரு சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன.
தல சிறப்பு
பராசரர், வியாசர், அகத்தியர் உள்ளிட்ட முனிவர்களும், இந்திரன், வருணன் ஆகிய அஷ்டதிக்கு பாலகர்களும், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் ஆகிய கிரகங்களும், ஆமைவடிவில் கமடேஸ்வரராக திருமாலும் இத்தலத்தில் இருக்கும் அன்னையை வழிபட்டுள்ளனர்.
மேலும், வரலாற்றுப் புகழ்பெற்ற சத்ரபதி சிவாஜியே ஸ்ரீகாளிகாம்பாள் அம்மனை வழிபட்ட பின்னரே, தன்னை சத்ரபதி என்று அறிவித்துக் கொண்டதாக சான்றுகள் உள்ளன.
சிறப்பு பூஜைகள்
சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினங்கள், சித்ரா பவுர்ணமி, வைகாசியில் பிரம்மோற்சவம், ஆடியில் வசந்த உற்சவம், வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், ஆடிக்கிருத்திகை, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் கமடேஸ்வரர் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம், கந்த சஷ்டி உற்சவம், கார்த்திகையில் சோமவார உற்சவம், கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழியில் மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா தரிசனம், அம்பாளின் தீர்த்தவாரி, தை மாதத்தில் புஷ்பாஞ்சலி, மகுடாபிஷேகம் ஆகியவை இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
எப்படிச் செல்வது
சென்னை உயர்நீதி மன்றம் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு நகரின் முக்கிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
ரயில் மார்கமாகச் செல்பவர்கள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து குறைந்தது 1 கி.மீ. தொலைவில்தான் காளிகாம்பாள் கோயில் அமைந்துள்ளது.