Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்படைவீடு - திருப்பரங்குன்றம்

முதல்படைவீடு - திருப்பரங்குன்றம்

Webdunia

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம்.

அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர் என்று அறியப்படுகிறது.

சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம். இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

அமைவிடம் :

தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்குவது மதுரை மாநகர். இம்மாமதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது திருப்பரங்குன்றம் என்னும் திவ்வியத் தலமாகும். ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம். மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

திருப்பரங்குன்றம் பெயர்க்காரணம் :

திரு + பரம் + குன்றம். பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகத் திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

லிங்க வடிவில் மலை :

திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார்.

இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

தவம் செய்த முருகப்பெருமான் :

குரு பக்தியின்றி ஞானம் பெற முடியாது. கயிலாயத்தில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடிமீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.

புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எனவே முருகப்பெருமானே பிரணவ மந்திரத்தினை, அதன் உட்பொருளை பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாஸ்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

காட்சி கொடுத்த சிவன்-பார்வதி :

கடைசியில், சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து அருளினார்கள். அவர்கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.

அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் வழங்கி வருகிறது. எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அவதரித்ததன் நோக்கம் :

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.

தெய்வயானை திருமணம் :

தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். முருகன் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil